புத்ராஜெயா:
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) 58ஆம் ஆண்டு விழா கடந்த அக்டோபர் 1ஆம் தேதி புத்ராஜெயாவில் மிக எழுச்சியுடன் நடைபெற்றது. 58 ஆண்டுகள் எம்ஏசிசி கடந்து வந்த பாதை எதிர்கொண்ட சவால்கள் ஆகியவை இந்த விழாவில் உணர்ச்சிப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த விழாவை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். ஊழலற்ற நாடாக மலேசியா வளர்ச்சி பெறுவதை காண விரும்புவதாக அவர் குறிப்பிட்டார். இவ்விழாவில் கிட்டத்தட்ட 30ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றியவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.
அவ்வகையில் எம்ஏசிசி பினாங்கு மாநில இயக்குநர் டத்தோ கருணாநிதி சுப்பையா 30 ஆண்டுகள் சேவையாற்றியதற்காக விருது பெற்றார். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவ்விருதினை அவருக்கு அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
இந்த உயரிய விருது பெற்ற ஓர் இந்திய அதிகாரி என்ற பெருமை சமுதாயத்திற்கு கிடைத்திருக்கிறது.
டத்தோ கருணாநிதி இதற்கு முன்னதாக சபா மாநில எம்ஏசிசி இயக்குநராக பொறுப்பேற்று திறம்பட செயலாற்றினார். அங்கு பொது நிகழ்ச்சிகளிலும் சமய விழாக்களிலும் கலந்துகொண்டு ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உரைகளை நிகழ்த்தியிருக்கிறார். பல பதவிகளை அலங்கரித்து இப்போது இயக்குநர் பதவியை ஏற்றிருக்கிறார்.
இந்நிகழ்ச்சியில் எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி, துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபடிலா யூசோப், உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காடிர், எம்ஏசிசி உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.






















