ஜோகூர் பாரு:
ஜோகூர் பாருவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான டாக்சி சேவைக்காக மலேசிய போக்குவரத்து செயலி ‘கும்முத்தே’ (Kummute) புதிய இணையவழி முன்பதிவு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
‘சிபி டாக்சி (CB Taxi)’ எனப் பெயரிடப்பட்ட இந்தச் சேவை, செப்டம்பர் 30 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. கும்முத்தே நிறுவனத்தின் தகவலின்படி, இந்த சேவையின் மூலம் உரிமம் பெற்ற ஜோகூர் பாரு–சிங்கப்பூர் டாக்சிகளை மலேசியத் தீபகற்பத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் பயணிகள் முன்பதிவு செய்ய முடியும். இத்தகைய டாக்சிகள், சிங்கப்பூரிலுள்ள பான் சான் ஸ்ட்ரீட் (Ban San Street) முனையம் வரை சேவை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் (Land Transport Authority – LTA) இன்று (அக்டோபர் 10) வெளியிட்ட அறிக்கையில், இந்தச் சேவைக்கு தங்களால் இதுவரை ஒப்புதல் வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
மேலும், ‘கும்முத்தே’யின் இணையவழி டாக்சி முன்பதிவு சேவை குறித்து விசாரித்து தெளிவுபடுத்த மலேசிய பொது நிலப் போக்குவரத்து ஆணையத்துடன் (APAD) இணைந்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்த ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, சிங்கப்பூரிலிருந்து ஜோகூர் பாருவிலுள்ள லார்கின் (Larkin) முனையத்துக்குப் பயணம் செய்ய, இணையவழி முன்பதிவு வசதி கம்ஃபர்ட்டெல்குரோ (ComfortDelGro) மற்றும் ஸ்டிரைட்ஸ் பிரிமியர் (Strides Premier) நிறுவனங்களுக்கே கிடைக்கிறது.





























