ஹாங்காங்:
துபாயிலிருந்து ஹாங்காங் வந்த சரக்கு விமானம் ஒன்று திங்கட்கிழமை அதிகாலை ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஓடுபாதையிலிருந்து விலகி விபத்துக்குள்ளானது. இதில் பாதுகாப்புப் பணியில் இருந்த விமான நிலைய ஊழியர்கள் இருவர் உயிரிழந்தனர்.
ஹாங்காங் நேரப்படி அதிகாலை 3.50 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில், துருக்கியைச் சேர்ந்த ஏசிடி ஏர்லைன்ஸ் (ACT Airlines) நிறுவனம் எமிரேட்ஸ் சார்பில் இயக்கிய போயிங் 747 சரக்கு விமானம், ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்று, சுற்றுக்காவல் வாகனத்துடன் மோதியது. தாக்கத்தின் பலத்தால் அந்த வாகனம் கடலுக்குள் தள்ளப்பட்டது.
விபத்தில், விமான நிலைய பாதுகாப்பு ஊழியர்கள் இருவரும் கடலில் மூழ்கினர். அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார், மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபின் உயிரிழந்தார் என்று ஹாங்காங் விமான நிலைய ஆணையத்தின் செயல் இயக்குநர் ஸ்டீவன் யியு உறுதிப்படுத்தினார்.
சரக்கு விமானமும் பகுதியளவில் கடலுக்குள் மூழ்கியதாகவும், ஆனால் விமானத்தில் இருந்த நான்கு குழுவினரும் பாதுகாப்பாக உயிர்தப்பியதாகவும் கூறப்பட்டுள்ளது.
எமிரேட்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “விபத்தில் சிக்கிய விமானம் எமிரேட்ஸ் சார்பில் இயங்கிய ஏசிடி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சரக்கு விமானம்” எனத் தெரிவித்துள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். வானிலை நிலை, ஓடுபாதை சூழல், விமானத்தின் தொழில்நுட்ப நிலை மற்றும் குழுவினரின் நடவடிக்கைகள் ஆகிய அனைத்தும் விசாரணையின் கீழ் உள்ளன என்று திரு யியு தெரிவித்தார்.
ஹாங்காங் விமான நிலையத்தின் விமான சேவைகள் விபத்தால் பாதிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.




















