இந்தியிலும் சூப்பர் ஹிட் கிடைக்குமா? எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் சாய்பல்லவி

தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் சாய் பல்லவி. ‘பிரேமம்’ படத்தின் மூலமாக தென்னிந்திய ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த சாய் பல்லவி, தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் கடந்த 10 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கவர்ச்சி காட்டாமல் தனக்கென தனி பாணியுடன் நடித்து வரும் சாய் பல்லவி அடிப்படையில் மருத்துவர் ஆவார். சினிமா மீதான ஆர்வத்தால், 2005-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘கஸ்தூரிமான்’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும், 2008-ம் ஆண்டு ‘தாம் தூம்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்திலும் சாய் பல்லவி நடித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு வெளியான ‘பிரேமம்’ தான் அவரது கேரியரில் பெரும் திருப்பத்தை கொடுத்தது.

தமிழில் ‘தியா’, தனுஷ் ஜோடியாக ‘மாரி 2’, ‘கார்கி’, சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘அமரன்’ ஆகிய படங்களில் நடித்தார். ‘அமரன்’ திரைப்படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இவர் மீண்டும் தனுஷ் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தற்போது பாலிவுட் திரைப்பக்கமும் சென்றுள்ளார் சாய் பல்லவி. அமீர்கான் மகன் ஜூனைத் கான் ஜோடியாக ‘ஏக் தீன்’ மற்றும் ‘ராமாயணா’ படங்களில் சாய் பல்லவி நடித்து வருகிறார். ‘ஏக் தீன்’ திரைப்படம் வருகிற மே மாதம் வெளியாக இருக்கிறது. இந்த படம் பாலிவுட்டில் நல்ல அறிமுகத்தை தரும் என்று சாய் பல்லவி நம்பிக்கையோடு காத்திருக்கிறாராம். அற்புதமான காதல் தழும்பும் கதையாக இந்த படம் உருவாகியிருக்கிறது.

2016-ம் ஆண்டு தாய்லாந்து நாட்டில் தாய் மொழியில் உருவான ‘ஒன் டே’ என்ற படத்தின் ரீமேக் ஆகும். பாலிவுட்டில் சாய் பல்லவிக்கு சிறந்த அறிமுகத்தை இந்த படம் கொடுக்கும் என திரையுலகிலும் பலர் கூறுகிறார்கள். ‘ராமாயணா’ படத்திற்கு ஒரு நல்ல அறிமுகமாக ‘ஏக் தீன்’ படம் அமையும் என்று சாய் பல்லவியும் எதிர்பார்க்கிறார். பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமீர்கானின் மகனாக இருந்தாலும், ஒன்றிரண்டு படங்களில் நாயகனாக நடித்திருந்தாலும் அவை எதுவும் சரியாக போகாத நிலையில், ஜூனைத் கானும் ‘ஏக் தீன்’ படத்தையே பெரிதும் நம்பியிருக்கிறார். சாய் பல்லவிக்கும், ஜூனைத் கானுக்கும் ‘ஏக் தீன்’ திரைப்படம் பாலிவுட்டில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here