ஜோகூர் பாரு:
தாசிக் மெனாவானில் நீரில் மூழ்கி காணாமல் போன இரண்டு சிறுவர்கள், பல மணி நேர தேடலுக்குப் பிறகு நேற்று இரவு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர்.
சம்பவம் குறித்து அவசர அழைப்பு இரவு 9.44 மணிக்கு கிடைத்தது. சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு மீட்புக் குழு சம்பவ இடத்துக்கு வந்து தேடுதல் பணியைத் தொடங்கியது என்று, ஜோகூர் ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் செயல்பாட்டுத் தளபதி ஷாஃபி முகமட் தான் கூறினார்.
ஏரிக் கரையில் இரண்டு ஜோடி செருப்புகள் கிடைத்தன, அவை காணாமல் போனதாகக் கூறப்படும் ஒன்பது வயது முஹமட் ரயான் இஸ்கந்தர் முகமட் ஹஃபிஸி மற்றும் பத்து வயது முஹமட் காலிஷ் ரய்கர்ல் ஹசிமிபுடி ஆகிய சிறுவர்களுக்குச் சொந்தமானவை என நம்பப்படுகிறது.
இறுதியில், சிறுவர்கள் அதிகாலை 2.28 மணிக்கு, ஏரிக் கரையிலிருந்து சுமார் ஐந்து மீட்டர் தூரத்தில், பாறையின் அடியில் 10 அடி ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டனர்.
இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அவர்களின் உடல்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன என ஷாஃபி தெரிவித்தார்.