மலாக்கா:
மாரடைப்பால் பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் தனது தந்தையின் கையின் கீழ் மாட்டிக்கொண்ட மூன்று மாத ஆண் குழந்தை உயிரிழந்தது, அதேநேரம் தந்தையும் உயிரிழந்தார்.
இந்த துயரமான சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் இங்குள்ள கம்போங் பெரிகி ஹாங் துவாவில் நடந்தது.
35 வயதான கணவர் நூருலெஃபெண்டி இப்ராஹிம் என்பவரின் கையின் கீழ், தனது மூன்று மாத ஆண் குழந்தை சிக்கிய நிலையில் காணப்பட்டதாக அவரது மனைவி அசுரா அப்துல் மாலிக் கூறினார்.
மூன்று உடன்பிறப்புகளில் இளையவரான பாதிக்கப்பட்ட முஹமட் நூர் டேனியல் நூருல் அபெண்டியை சுகாதார மருத்துவமனைக்கு ஊசி போட அழைத்து செல்வதற்காக அவரது தாயார் வீடு திரும்பியபோது, வீட்டிற்கு வந்ததும் தனது கணவரின் கையின் கீழ் தனது குழந்தையைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாக அசுரா கூறினார்.
“நான் படுக்கையறைக்குள் நுழைந்தபோது அதிர்ச்சியடைந்தேன். அவர்கள் இருவரும் மயக்கமடைந்து படுக்கையில் இருப்பதைக் கண்டேன். ஆனால் அங்கு ரத்தம் ஏதும் இருக்கவில்லை. ஆனாலும் அந்த நேரத்தில் குழந்தை இன்னும் உயிருடன் இருந்தது. ஆனால் மிகவும் பலவீனமான நிலையில் இருந்தது” என்று குழந்தையின் தாயார் கூறினார்.
உடனே மலாக்கா மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு குழந்தையை அழைத்து சென்றதாகவும், அங்கு சிகிச்சை பெற்று வந்தபோது, சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்துவிட்டது என்று அவர் சொன்னார்.
மேலும் கணவர் நூருல் அபென்டி இப்ராஹிமும் மாரடைப்பால் இறந்தது உறுதி செய்யப்பட்டது என்று அவர் கூறினார்.
அதேநேரத்தில் சகோதரி மஸ்துராடியானா (33) கூறுகையில், தனது சகோதரர் முந்தைய நாள் மார்பு வலி இருப்பதாக புகார் அளித்ததாகவும், ஆனால் மருத்துவ உதவியை நாட மறுத்துவிட்டதாகவும் கூறினார்.





















