கோத்தா பாரு:
இந்தாண்டு ஜனவரி முதல் அக்டோபர் 16 வரை நடைபெற்ற தொடர்ச்சியான சோதனைகளில், மொத்தம் RM6.2 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புடைய வரி செலுத்தப்படாத 47 வாகனங்களை கிளந்தான் சுங்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் சட்டப்பூர்வ இறக்குமதி மற்றும் வரி நடைமுறைகளை பின்பற்றாமல் அண்டை நாடுகளிலிருந்து கடத்தப்பட்டவை என நம்பப்படுகிறது என்று, மாநில சுங்கத்துறை இயக்குநர் வான் ஜமால் அப்துல் சலாம் வான் லாங் தெரிவித்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் Volkswagen Beetle, Volvo S80, BMW 325i, Maserati Ghibli, Honda Jazz, Toyota Vellfire மற்றும் Mercedes-Benz உள்ளிட்ட பல சொகுசு கார்களும் அடங்கும் என்றும், இவை RM53,000 முதல் RM185,000 வரையிலான விலையில் விற்கப்பட்டதாகவும், இது சந்தை மதிப்பை விட 35% முதல் 40% வரை குறைவாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“இந்த வாகனங்களுக்கு செல்லுபடியாகும் அனுமதி மற்றும் ஆவணங்கள் இல்லாவிட்டாலும், குறித்த கடத்தல் கும்பல்கள் சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் மூலம் வாங்குபவர்களை கவர பல்வேறு தந்திரங்கள் பயன்படுத்தியிருந்தன,” என்று அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.
கிளந்தான், கோலாலம்பூர் மற்றும் ஜோகூர் உட்பட பல இடங்களில், எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட உளவுத்துறை அடிப்படையிலான சோதனைகள் மூலம் இந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் 1967 சுங்கச் சட்டத்தின் பிரிவு 135(1)(d) இன் கீழ் விசாரிக்கப்படுகின்றன. இதன்படி, குற்றம் நிரூபிக்கப்பட்டால், பொருட்களின் மதிப்பின் 10 மடங்கு அல்லது RM50,000, எது அதிகமோ அதற்கேற்ப அபராதம் விதிக்கப்படும். அதோடு அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.





















