புதுடெல்லி:
தீபாவளி திருநாளின்போது டெல்லியில் பெரிய அளவில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த இருவர் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல் துறை கூடுதல் ஆணையர் பிரமோத் குஷ்வாஹா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
விசாரணையில், தெற்கு டெல்லி பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகம் மற்றும் பூங்கா உள்ளிட்ட மக்கள் நெரிசல் அதிகம் உள்ள இடங்களில் தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதற்காக அவர்கள் அந்த இடங்களில் முன்பே சென்று ஆய்வு செய்திருந்தனர்.
இவர்களின் வலைப்பின்னல் மற்றும் சதித் திட்டங்களை முழுமையாக அறிய தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக பிரமோத் குஷ்வாஹா கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது, “அக்டோபர் 16ஆம் தேதி அட்னான் என்ற ஒருவரை டெல்லியின் சாதிக் நகர் பகுதியில் கைது செய்தோம். அதன் பின்னர் அதே பெயருடைய மற்றொரு நபரை போபாலில் கைது செய்தோம்,” என்றார்.





















