இப்படிப் பார்க்கவா 40 ஆண்டுகள் காத்திருந்தேன்?ஒரு தாயின் கதறல் இதயத்தை உலுக்கியது

(பி.ஆர். ராஜன்)

தான் பெற்ற மகளை நேரில் காண வேண்டும் என ஒரு தாய் நாற்பது ஆண்டுகள் காத்திருந்தார்.  அந்த ஏக்கம் நிறைவேறாமல்  அவரை பிணமாகப் பார்க்கும் கொடுமை அவருக்கு ஏற்பட்டது. 

அறுபது வயது அமிர்தவள்ளி திருமணமாகி மூன்று பெண் பிள்ளைகள், ஓர் ஆண் மகன் ஆகியோரை பெற்றெடுத்த நிலையில்  கணவரைப் பிரிந்து தனிமையில் வாழ்ந்து பெரும் துயரத்தை அனுபவித்தார்.

இந்தப் பெண் பிள்ளைகளில் 49 வயது லெட்சுமி திருமணமாகி உலுசிலாங்கூர் புக்கிட் பெருந்தோங்கில் வாழ்ந்து வந்தார். இவரும் கணவரால் கைவிடப்பட்டு தனிமையில் வாழ்ந்து ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வாழ்க்கையை நகர்த்தினார்.

தன்னுடைய ஒன்பதாவது வயதில் தன் தாயைப் பிரிந்த லெட்சுமி எப்படியாவது ஒரு முறையாவது தாயைப் பார்த்துவிட வேண்டும் என ஏங்கித் தவித்தார். ஆனால், தன் தாயைப் பற்றி எந்தவொரு தகவலும் அவருக்குக் கிடைக்கவில்லை.

ஆஸ்துமா பிரச்சினையால் வாடி வதங்கிப் போன லெட்சுமிக்கு கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. அவருடன் வேலை செய்தவர்கள் அவரை அவசரமாக ஒரு தனியார் கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றனர்.  

அவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால் ஆம்புலன்ஸ் மூலம் கோலகுபுபாரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துவிட்டதை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

உடன்பிறந்தவர்கள் இருந்தும் ஓர் அநாதையாக அவரின் உடல் சவக்கிடங்கில் வைக்கப்பட்டது. போலீசாரில் உதவியுடன் லெட்சுமியின் தாயார் அமிர்தவள்ளிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

கணவர், பிள்ளைகளைப் பிரிந்த துயரத்தில் நோய்வாய்ப்பட்டிருந்த அமிர்தவள்ளி ஒரு காலையும் இழந்து கோலசிலாங்கூரிலுள்ள  ஓர் உறவினர் வீட்டில்  அடைக்கலம் பெற்று தன் வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்.

தன் மகளை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று ஏங்கித் தவித்த அந்தத் தாய்க்கு மகளின் மரணச் செய்தி பேரிடியாக அமைந்தது.

உன்னைப் பிணமாகப் பார்க்கவா நான் இத்தனை காலம் காத்திருந்தேன் என்று அவர் கதறி துடித்தது அருகில் இருந்தவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

மகளின்  தகனச் செலவிற்குக் கூட பணம் இல்லாத நிலையில் அத்தாய் தத்தளித்தார். தகவல் அறிந்த உலுசிலாங்கூர் பிகேஆர் தலைவர் டாக்டர் சத்தியபிரகாஷ் நடராஜன் தகனச் செலவுக்கு உடனடியாக ஆயிரம் ரிங்கிட் கொடுத்து உதவினார்.

தகனச் செலவிற்கான எஞ்சிய 1,500 ரிங்கிட்டை உலுசிலாங்கூர் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் ப. புவனேஸ்வரன், முருகன் ஆகியோர் சொந்த முயற்சியில் ஏற்பாடு செய்து தகனக் காரியங்களை செய்து முடிப்பதற்கு உதவினர்.

லெட்சுமியின் நல்லுடல் செரண்டா மின்சுடலையில் தகனம் செய்யப்பட்டது. தாயாரும்  தனிமையில் வாழ்ந்து மகளும் தனிமையில் போராடி இறுதிவரை ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள முடியாமல் ஏங்கித் தவித்திருக்கின்றனர்.

இந்தப் பாசப் போராட்டத்தில் இறப்பில் முந்திக்கொண்டார் லெட்சுமி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here