கோலாலம்பூர்:
தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விராகுல், 47வது ஆசியான் உச்சநிலை மாநாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய மாநாடுகளில் பங்கேற்க இன்று சனிக்கிழமை (அக்டோபர் 25) இரவு மலேசியா வந்தார்.
இந்த மாநாடுகள் அக்டோபர் 26 முதல் 28 வரை கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறுகின்றன.
அனுடின் மற்றும் அவரின் பிரதிநிதிகள் பயணித்த சிறப்பு விமானம் இரவு 9.24 மணிக்கு சுபாங் ராயல் மலேசிய விமானப்படைத் தளத்தில் தரையிறங்கியது. அப்போது அவர்கள் மலேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ ஸெரி முகமட் காலிட் நோர்டின் அவர்களால் வரவேற்கப்பட்டனர்.
முன்னதாக தாய்லாந்தின் முன்னாள் அரசியார் சிரிகிட் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 24) காலமானதைத் தொடர்ந்து, தாய்லாந்து பிரதமர் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், அவர் இன்று மலேசியா வந்தடைந்தார்.
இந்நிலையில் கம்போடியாவுடன் போர் நிறுத்த உடன்பாட்டில் நாளை அவர் கையெழுத்திடப்போவதாகக் கூறப்படுகிறது.
மேலும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், நாளை ஞாயிற்றுக்கிழமை காலை கோலாலம்பூர் வருகிறார். கம்போடியாவும் தாய்லாந்தும் சண்டை நிறுத்தம் குறித்த விரிவான உடன்பாட்டில் கையெழுத்திடுவதை அமெரிக்க அதிபர் பார்வையிடுவார் என்றும், கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையில் இவ்வாண்டு (2025) ஜூலை மாதம் எல்லைப் பகுதியில் ஐந்து நாள் சண்டை மூண்டது. அதை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் உதவினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




















