மலேசியாவில் உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை குறைவு; 10,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் வாய்ப்பிற்காக காத்திருப்பு

கோலாலம்பூர்:

நாட்டில் 10,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் உடல் உறுப்பு தானத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள், இதன் மூலம் தங்களுக்கு வாழ்க்கையை வாழ மற்றொரு வாய்ப்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர், ஆனால் மலேசியாவில் உடல் உறுப்புக்களை தானம் செய்வதில் முனைப்புக்காட்டுவது மிகக்குறைவு எனக் கூறப்படுகிறது.

தேசிய மாற்று வள மையத்தின் (NTRC) புள்ளிவிபரங்களின்படி, கடந்த ஆண்டு நவம்பர் மாத நிலவரப்படி, சிறுநீரக மாற்று சிகிச்சை நோயாளிகள் 10,266 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர், அதைத் தொடர்ந்து இதய மாற்று அறுவை சிகிச்சைகள் (ஒன்பது நோயாளிகள்), கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் (ஒன்பது), இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் (ஆறு) மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக ஒரு நோயாளியும் காத்திருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.

இன்றுவரை 960 நன்கொடையாளர்கள் மட்டுமே தாம் இறந்த பிறகு தங்கள் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் உயிரைக் காப்பாற்றியுள்ளனர், மேலும் 1976 முதல் மொத்தம் 3,024 உறுப்புகள் மாற்றப்பட்டு, நோயாளிகளுக்கு புத்துயிர் அளித்துள்ளது என்று, NTRC இயக்குநர் டாக்டர் முகமட் சியாபிக் இஸ்மாயில் அஸ்மான் கூறினார்.

“ஒரு தனிநபரின் செயல்கள் பல வாழ்க்கையை மாற்றும் என்பதை இந்த புள்ளிவிவரங்கள் நிரூபிக்கின்றன. இருப்பினும், உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது, எனவே உறுப்பு தானம் செய்வதன் முக்கியத்துவத்தை அனைவரும் புரிந்துகொண்டு, தம்மை இதற்காக தயார்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

“மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், மலேசியாவில் உறுப்பு தானம் விகிதம் இன்னும் குறைவாகவே உள்ளது. இருப்பினும், மலேசியாவில் ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு 1.35 உறுப்பு தானம் என்ற விகிதத்தில் ஒரு சிறிய அதிகரிப்பு உள்ளது,” என்று , அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here