செயற்கை நுண்ணறிவுக்கு உலகளாவிய ஒத்துழைப்பு அமைப்பு தேவை: சீன அதிபர் ஸி ஜின்பிங் வலியுறுத்தல்

பெய்ஜிங்:

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சி உலகளவில் ஒருங்கிணைந்த நிர்வாகத்தையும் பொறுப்பான ஒத்துழைப்பையும் தேவைப்படுத்துகிறது என்று சீன அதிபர் ஸி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவின் கியோங்ஜு நகரில் நடைபெறும் ஏபெக் (APEC) உச்சிமாநாட்டில் சனிக்கிழமை உரையாற்றியபோது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய சர்வதேச அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

அதிபர் ஸி கூறியதாவது:

“செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்தின் எதிர்கால வளர்ச்சிக்கான முக்கிய இயந்திரம். அனைத்து நாடுகளும் சேர்ந்து அதன் வளர்ச்சியை மனித நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்றார்.

அவரது கருத்துக்களை சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் ஸின்ஹுவா (Xinhua) வெளியிட்டது.

ஸி ஜின்பிங் மேலும் கூறியதாவது, “உலகச் செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்பு அமைப்பு” (Global AI Cooperation Organization) நிறுவப்பட்டால், அதன் மூலம் விதிமுறைகள் உருவாக்கப்பட்டு, சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவித்து, உலகம் முழுவதும் அதிலிருந்து பயன் பெற முடியும்.

சீன அதிகாரிகள் அந்த அமைப்பை ஷாங்காய் (Shanghai) நகரில் அமைக்கலாம் என சுட்டிக்காட்டியுள்ளனர். இது சீனாவை அமெரிக்காவுக்கு மாற்றாக தொழில்நுட்ப தலைவராக நிலைநிறுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

இதேவேளை, செயற்கை நுண்ணறிவு தொடர்பான சர்வதேச ஒப்பந்த முயற்சிகளை அமெரிக்கா இதற்கு முன் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here