கோலாலம்பூர்:
நாடு முழுவதும் அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வந்த பொழுதுபோக்கு மையங்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட இரண்டு நாள் சிறப்பு சோதனையில் மொத்தம் 398 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 128 பேர் வெளிநாட்டு பெண் பொழுதுபோக்கு இணை அலுவலர்கள் (GRO) ஆவர்.
“ஆப்ஸ் நோடா” எனக் குறியிடப்பட்ட இந்த சோதனைகள், புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறையின் (CID) ஒழுக்கக்கேடு, சூதாட்டம் மற்றும் இரகசியச் சமூகங்கள் எதிர்ப்பு பிரிவான (D7) குழுவினரால் நவம்பர் 7 மற்றும் 8 தேதிகளில் மேற்கொள்ளப்பட்டது.
“நாடு முழுவதும் உள்ள மொத்தம் 118 பொழுதுபோக்கு மையங்கள் சோதனை செய்யப்பட்டன. அதில் 103 மையங்கள் உரிய அனுமதிப் பத்திரம் இல்லாமல் செயல்பட்டது கண்டறியப்பட்டது” என்று, புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு இயக்குநர் கமால் டத்தோ எம். குமார் கூறினார்.
“இந்த நடவடிக்கையில் ஐந்து நிறுவன உரிமையாளர்கள், மூன்று மேலாளர்கள், 150 பணியாளர்கள், 112 வாடிக்கையாளர்கள் மற்றும் 128 வெளிநாட்டு GRO-க்கள் கைது செய்யப்பட்டனர்,” என அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் 87 பேர் மலேசியர்கள் (76 ஆண்கள் மற்றும் 11 பெண்கள்) மற்றும் 311 பேர் வெளிநாட்டினர் (151 ஆண்கள் மற்றும் 160 பெண்கள்) ஆவர். போலீசார் பணமும், பொழுதுபோக்கு மையங்களில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு உபகரணங்களும் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 19 முதல் 55 வயதுக்குட்பட்ட அனைவரும் தொடர்புடைய சட்டங்களான
• சாகாய வரி சட்டம் 1976 பிரிவு 76 – அனுமதி இல்லாமல் மதுபானம் விற்பனை
• குடியேற்றச் சட்டம் 1959/63 பிரிவு 15(1)(c) – அனுமதிக்காலம் முடிந்த பிறகும் நாட்டில் தங்குதல்
• குடியேற்றச் சட்டம் 1959/63 பிரிவு 6(1)(c) – செல்லுபடியாகும் ஆவணங்கள் இன்றி நாட்டில் தங்குதல் போன்ற சட்டங்களின் கீழ் விசாரிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்காக அருகிலுள்ள போலீஸ் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
“அங்கீகாரமின்றி இயங்கும் அனைத்து பொழுதுபோக்கு மையங்களையும் கட்டுப்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் இத்தகைய நடவடிக்கைகள் தொடரும்,” என குமார் வலியுறுத்தினார்.
மேலும், பொதுமக்கள் சட்டவிரோத செயல்பாடுகள் குறித்து தகவல் வழங்கி அதிகாரிகளை உதவுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.





















