கிள்ளான்:
கிள்ளானிலிருந்து பந்திங் நோக்கி செல்லும் சாலையில் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு எதிராக போக்குவரத்து குற்றப்புலனாய்வுத் துறை நடத்திய சிறப்பு சோதனையில் மொத்தம் 210 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நள்ளிரவு மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, பல்வேறு குழுக்களாக மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் தடுக்கப்பட்டனர். அவர்களில் ஐந்து பேர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.
மேலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக 105 சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட 210 மோட்டார் சைக்கிள்களில், 18 வயதுக்கு குறைவான ஓட்டுனர்களின் வாகனங்கள் அவர்களின் பெற்றோரைக் காவல் நிலையத்திற்கு வரவழைத்து உரிய எச்சரிக்கையுடன் மீண்டும் வழங்கப்பட்டன.
அபராதத் தொகையைச் செலுத்தாத அல்லது ஆவணங்கள் சரியாக இல்லாத மோட்டார் சைக்கிள்கள் சிலாங்கூரில் உள்ள காவல்துறை கிடங்கிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
காவல்துறை பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இத்தகைய சட்டவிரோத வேகப்பந்தயங்களுக்கு எதிராக தொடர்ந்து கண்காணிப்பும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது.





















