ஜோகூர் பாரு:
ஜோகூர் பாருவில் கடைத் தொகுதிகளில் தங்கியிருந்து சட்டவிரோதமாக வேலை செய்ததாக நம்பப்படும் 45 வெளிநாட்டு தொழிலாளர்களை மலேசிய குடிநுழைவு துறை நேற்று சனிக்கிழமை (நவம்பர் 8) அதிகாலை கைது செய்தது.
இந்த நடவடிக்கை தாமான் மவுண்ட் ஆஸ்டின் பகுதியில் அதிகாலை 12.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டதாக ஜோகூர் குடிநுழைவு இயக்குநர் டத்தோ’ முகமட் ருஸ்டி முகமட் தருஸ் தெரிவித்துள்ளார்.
“கடைத் தொகுதிகளில் சட்டவிரோதமாக வேலை செய்துவரும் ஆவணமற்ற குடியேறிகள் இருப்பதாக உளவுத்துறை மற்றும் பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில, இந்த சோதனை நடத்தப்பட்டது,” என முகமட் ருஸ்டி கூறினார்.
சோதனை நடைபெற்ற நேரத்தில் பல வெளிநாட்டினர் கடைகளுக்குள் ஓய்வெடுத்து தங்கியிருந்தனர். சில கடைகள் அவர்களால் வசிப்பிடங்களாக மாற்றப்பட்டிருந்ததாகவும், அதனை அதிகாரிகள் கண்டறிந்ததாகவும் அவர் கூறினார்.
“சோதனையின் போது சிலர் தப்பிக்க முயன்றனர்; சிலர் குளியலறைகளிலும் கூரைகளிலும் மறைந்தனர். ஆனால் எங்கள் அதிகாரிகள் அனைவரையும் வெற்றிகரமாக கைது செய்தனர்,” என்று அவர் குறிப்பிட்டார்.
குடிநுழைவு துறையின் தகவல்படி, கைது செய்யப்பட்டவர்கள் 9 மாதங்கள் முதல் 46 வயது வரை உள்ளவர்கள்.
செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாதது, விசா காலாவதி ஆனபின்னரும் நாட்டில் தங்கியிருத்தல் உள்ளிட்ட பல்வேறு குடியேற்றச் சட்ட மீறல்கள் தொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“கைதிகளில் 19 மியன்மார் ஆண்கள், 9 பாகிஸ்தானியர்கள், 7 இந்தியர்கள், 3 இந்தோனேசியர்கள், ஒரு மியன்மார் சிறுவன், 5 மியன்மார் பெண்கள் மற்றும் ஒரு இந்தோனேசிய பெண் ஆகியோர் அடங்குவர்,” என முகமட் ருஸ்டி தெரிவித்தார்.
அனைத்து கைதிகளும் தற்போது செத்தியா டிராபிகா குடிநுழைவு தடுத்துவைப்பு மையத்தில் (Setia Tropika Immigration Depot) தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது குடிநுழைவு சட்டம் 1959/63 மற்றும் குடிநுழைவு விதிமுறைகள் 1963ன் கீழ் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.



















