புத்ராஜெயா: முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுதீன் தனது அமைச்சரவைக்குத் திரும்புவார் என்ற ஊகங்களை பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று நிராகரித்தார். “அப்படியா… உங்களுக்கு யார் சொன்னது?” என்று இன்று செய்தியாளர்களிடம் அவர் கேட்டார்.
டிசம்பர் தொடக்கத்தில் ஒரு பெரிய அமைச்சரவை மாற்றம் நடக்கக்கூடும் என்றும், கைரி இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சராக இருப்பார் என்றும் மலேசியா கெசட் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து அவரது சுருக்கமான கருத்து தெரிவிக்கப்பட்டது. அரசாங்கத்தின் பொருளாதாரக் குழுவை வலுப்படுத்துதல், அமைச்சரவையின் அளவைக் குறைத்தல், கொள்கைகளின் தொடர்ச்சியை உறுதி செய்தல் ஆகியவற்றில் இந்த மறுசீரமைப்பு கவனம் செலுத்தும் என்று அறிக்கை கூறியது.
ஜோஹாரி கனிம முதலீடு, வர்த்தகம் தொழில்துறை அமைச்சராக நியமிக்கப்படுவார் என்றும் பொருளாதார அமைச்சகம் நிதி அமைச்சகத்தின் கீழ் இணைக்கப்படலாம் என்றும் அது கூறியது. குறிப்பிடப்பட்டுள்ள பிற சாத்தியமான மாற்றங்களில் துணை தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் ஆர். ரமணனை அமைச்சராக பதவி உயர்வு செய்தல் துணை அமைச்சர் மட்டத்தில் சரிசெய்தல் ஆகியவை அடங்கும்.
























