ஜார்ஜ் டவுன்:
சரவாக்கைச் சேர்ந்த 15 வயது சிறுவன், Gurney Bay-யில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் தலையில் காயம் அடைந்ததையடுத்து அந்த இடம் அதிகாரிகளால் தற்காலிகமாக மூடப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
பினாங்கில் தனது பள்ளித் தோழர்களுடன் விடுமுறை சென்றிருந்த அந்த மாணவன், மாலை 6 மணியளவில் பூங்காவைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.
நேரில் இருந்த சாட்சியினரின் கூற்றுப்படி, சிறுவன் ஒரு பெரிய தடைப் பாதையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தபோ,து மேல் இருந்த கிடைமட்ட உலோகக் கம்பியில் மோதியுள்ளார். தாக்கத்தினால் அவரது தலையில் ஆழமான காயம் ஏற்பட்டது; ரத்தம் வழிந்தது.
சம்பவத்தை கண்ட பொதுமக்கள், நண்பர்கள் மற்றும் ஆசிரியர் உடனடியாக உதவிக்கு விரைந்து, ஆம்புலன்ஸ் வரும்வரை முதலுதவி வழங்கினர். சிறுவன் பின்னர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
விபத்து நடந்த சமயத்தில் மூன்று மாடி உயரமுள்ள அந்த தடைப்பாதையின் மேல்தளங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றிருந்ததாகவும், அது பொதுமக்களுக்கு திறந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதிகாரிகள் சம்பவத்துக்குப் பிறகு அந்த பகுதியை சீல் செய்து, பாதுகாப்பு ஆய்வைத் தொடங்கியுள்ளனர்.
அதே நேரத்தில், கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஸ்கேட்பார்க்கில் பயிற்சி செய்தபோது 13 வயது சிறுவன் விழுந்து இடது கை எலும்பு முறிந்த சம்பவமும் அப்பகுதியில் நடந்தது. அப்போது ஹெல்மெட், முழங்கை மற்றும் முழங்கால் பாதுகாப்புப் பட்டைகள் அணிந்திருந்ததாக கூறப்படுகிறது.
அதிகாரிகள் இச்சம்பவங்களை மிகுந்த கவனத்துடன் எடுத்துக்கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்தி வருகின்றனர்.





















