கோலாலம்பூர்:
சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டுத்துறை முன்னாள் அமைச்சரின் முன்னாள் அந்தரங்கச் செயலாளரான முகமட் சைஃபுல்லா முகமட் மிங்குவிற்கு (34), 7 ஆண்டுகளுக்கு முன்பு விளம்பர சேவைக்கான குத்தகை ஒப்பந்தத்தை எளிதாக்குவதற்காக லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 6 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் RM8.8 மில்லியன் அபராதம் விதித்தது.
நீதிபதி சுஸானா ஹுசேன் தண்டனை வழங்கியபோது, இந்தத் தண்டனை எதிர்காலத்தில் குற்றவாளி தவறு இல்லா வாழ்க்கையை வாழ்வதற்கான பாடமாக அணுக வேண்டும் என்று குறிப்பிட்டார். தண்டனை இன்று முதல் அமலுக்கு வர உத்தரவிடப்பட்டது.
முகமட் சைஃபுல்லா, 2020 ஆம் ஆண்டை ‘மலேசியாவிற்கு வருகை தரும் ஆண்டு’ என அறிவித்ததையொட்டி மேற்கொள்ளப்பட்ட விளம்பர முயற்சிகளுக்காக, Inter Bev Network Sdn Bhd நிறுவனத்தின் உரிமையாளர் ரொனால்ட் செட்டோ காங் செங் என்பவரிடமிருந்து RM1.765 மில்லியன் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
அரசு தரப்பு, இந்தத் தொகை குத்தகை ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான பலனாக வழங்கப்பட்டதாக நீதிமன்றத்தில் விளக்கியது.
























