ஜோகூர் பாரு:
தொழிலாளர் சுரண்டல் மற்றும் ஆட்கடத்தல் குற்றத்தில் ஈடுபட்டதாக 22 வயதான விற்பனையாளர் ஒருவருக்கு எதிராக இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
குற்றச்சாட்டுக்குள்ளான வின்செண்ட் சாக் ழான் ஷெங், நீதிபதி ஹிதாயதுல் ச்யூஹடா ஷம்சுதின் முன்னிலையில் வாசிக்கப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் “தான் குற்றமற்றவன்” (Not Guilty) என பதிலளித்து, விசாரணை கோரினார்.
முதல் இரண்டு குற்றச்சாட்டுகளில், குற்றம் சாட்டப்பட்டவர் மேலும் ஐந்து பேருடன் சேர்ந்து,15 வயது சிறுமி மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோரை தொழிலாளர் சுரண்டலுக்காக கூலாய், தாமான் லகெண்டா புத்திரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏப்ரல் முதல் மே 23 வரை கடத்த சதி செய்ததாக, அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த இரண்டு குற்றச்சாட்டுகள் மனிதக் கடத்தல் மற்றும் குடிபெயர்ந்தவர்களை சட்டவிரோதமாக கடத்துவதைத் தடுக்கும் சட்டம் 2007 (Atipsom) இன் பிரிவு 14 மற்றும் பொது குற்றச்சட்டம் பிரிவு 34 (பொது நோக்கம்) ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை அல்லது குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் கசப்புத் தண்டனை (சவுக்கடி) விதிக்கப்படும்.
மூன்றாவது குற்றச்சாட்டில், 26 வயதான ஒருவரை அதே இடத்தில் மார்ச் 23 முதல் மே 23 வரை தொழிலாளர் சுரண்டலுக்காக கடத்தியதாக, இந்த செயலில் மேலும் ஐந்து பேருடன் சேர்ந்து செயல்பட்டதாக சாக் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த வழக்கு Atipsom சட்டம் 2007 பிரிவு 12 மற்றும் பொது குற்றச்சட்டம் பிரிவு 34 கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வழக்கில் நீதிமன்றம் மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் மொத்தமாக RM30,000 ஜாமீன் தொகையை நிர்ணயித்தது. அத்தோடு அருகிலுள்ள காவல் நிலையத்தில் மாதம் ஒருமுறை புகார் அளிக்க வேண்டும், அவரது அனைத்துலக கடப்பிதழை நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் மற்றும் வழக்கில் உள்ள சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை தொந்தரவு செய்யக் கூடாது என்ற, அரசுத் தரப்பு முன்மொழிந்த மூன்று கூடுதல் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.
இந்த வழக்கில் ஆவணங்கள் சமர்ப்பிக்க அடுத்த ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது.





















