கோலாலம்பூர்:
நேற்று காலை ஜோகூரில் பலவீனமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 6.13 மணிக்குச் செகமாட்டில் (Segamat) 4.1 ரிக்டர் அளவில் ஒரு நிலநடுக்கமும், மற்றொன்று காலை 9 மணிக்கு யோங் பெங் (Yong Peng) பகுதியில் 2.8 ரிக்டர் அளவிலும் இரண்டு நில அதிர்வுகள் பதிவாகின.
இந்த நிலநடுக்கத்தால் சொத்து சேதம் குறித்த மூன்று புகார்களைப் பெற்றதாகச் செகமாட் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இதனிடையே எந்தவிதக் காயங்களோ அல்லது உயிர்ச் சேதமோ பதிவாகவில்லை. மாவட்டக் காவல்துறைத் தலைவர் சுப்ரின்டெண்டன் அகமட் ஸம்ரி மரின்சா (Supt Ahmad Zamry Marinsah), நிலைமை பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யக் கண்காணிப்புத் தொடரும் என்று கூறினார்.
அத்துடன், பொதுமக்களுக்கு ஏதேனும் அவசரம் ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது செகமாட் மாவட்டத் தலைமையகத்திற்குத் தெரிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.





















