ஜோகூர் பாரு:
சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட ப்ரெஷியஸ் மருத்துவக் குழுமம் ஜோகூர் பாருவில் புதிய புற்றுநோய் மருத்துவமனையும் சிகிச்சை நிலையத்தையும் நிறுவியுள்ளது. ‘துங்கு லக்ஷ்மணா ஜோகூர் புற்றுநோய் மையம்’ என்ற பெயரில் இந்தத் திட்டம் டிசம்பர் 5ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட உள்ளது.
ரிங்கிட் 121.1 மில்லியன் செலவில் உருவாக்கப்பட்ட இந்த நவீன மருத்துவமனையில் ‘PET-CT’ படமெடுக்கும் வசதி, கதிர்வீச்சு சிகிச்சை மையம் (Radiotherapy Centre) உள்ளிட்ட மேம்பட்ட மருத்துவ தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன. புற்றுநோயைக் கூடிய விரைவில் கண்டறிந்து துல்லியமான சிகிச்சை வழங்க உதவும் வசதியாக, அரிய வகை கருவியான ‘சைக்ளோட்ரான்’ இயந்திரமும் இதில் நிறுவப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின்வழி சுமார் 1,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வளாகத்திற்குள் 200 மெத்தைகள் கொண்ட தனி மருத்துவமனை கட்டடம் ஒன்றையும் எதிர்காலத்திற்கான விரிவாக்கமாக நிறுவப் பிரெஷியஸ் குழுமம் திட்டமிட்டுள்ளது. இது ஜோகூர்–சிங்கப்பூர் சிறப்பு பொருளாதாரப் பகுதியில் சுகாதார சேவைகளை மேலும் வலுப்படுத்தும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
லார்க்கின் செண்ட்ரலில் முக்கிய போக்குவரத்து மையத்துக்கு அருகில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை, உள்ளூர் நோயாளிகளுடன் கூடவே வெளிநாட்டு மருத்துவ சுற்றுலாப் பயணிகளுக்கும் எளிய அணுகலை வழங்குகிறது. ஆண்டுதோறும் மலேசியாவை நோக்கி 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட மருத்துவ சுற்றுலாப் பயணிகள் வருவதாகத் தரவுகள் குறிப்பிடுகின்றன.
இம்மையம், புற்றுநோயால் இளைய வயதில் காலமான ஜோகூர் இளவரசர் அப்துல் ஜலீல் அவர்களின் நினைவாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. “வலிமை, தைரியம், மீட்சி ஆகிய பண்புகளுடன் திகழ்ந்த இளவரசருக்கு இந்த மருத்துவமனை நிரந்தர அஞ்சலி,” என்று பிரெஷியஸ் குழுமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் வில்லியம் சோங் தெரிவித்தார்.




















