கோலாலம்பூர்:
நேற்று ஜாலான் TP 7/7 சுபாங் ஜெயா என்ற முகவரியில் உள்ள ஒரு ஊழியர் விடுதியில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, குச்சியைப் பயன்படுத்தி சகநாட்டவருக்கு காயத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் வங்காளதேச ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் வழங்கிய புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாகவும், 37 வயதுடைய சந்தேக நபர் குச்சியால் தலையின் பின்பகுதியில் தாக்கியதில் பாதிக்கப்பட்டவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் குடித்துவிட்டு வீட்டில் சத்தம் போட்டதே சம்பவத்திற்கான காரணம் என நம்பப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்டவர் தற்போது நிலையான நிலையில் உள்ளார் என்றும் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அவர் கூறினார்.
ஆயுதத்தை பயன்படுத்தி ஒருவரை காயப்படுத்திய குற்றத்திற்காக குற்றவியல் சட்டம் பிரிவு 324ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அபராதம் அல்லது சவுக்கடி அல்லது 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.























