கோலாலம்பூர் :
கடந்த வாரம் சிரம்பானில் உள்ள ஜாலான் ராசா-மாம்பாவ் பகுதியில் ஒருவர் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, காவல்துறை மேலும் இரண்டு நபர்களைக் கைது செய்துள்ளது.
சிரம்பான் காவல்துறைத் தலைவர் அஸஹார் அப்துல் ரஹிம் செய்தியாளர்களிடம் பேசுகையில், 30 வயதுடைய இரு சந்தேக நபர்களும் நேற்று அதிகாலை பினாங்கில் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உதவுவதற்காக இருவரும் டிசம்பர் 19 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சொன்னார்.
“இதுவரை, மொத்தம் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஒரு cm -ஆட்டோமேட்டிக் துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது,” என்று அஸஹார் தெரிவித்துள்ளார்.
முதலில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களின் தடுப்புக் காவலும் டிசம்பர் 19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
வழக்கு விசாரணை அறிக்கை டிசம்பர் 18 அன்று நெகிரி செம்பிலான் காவல்துறை தலைமையகத்திற்கு அனுப்பப்படும் என்றும், அதன் பிறகு மாநில வழக்கறிஞர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த டிசம்பர் 10 அன்று, போர்ட் டிக்சன் சுங்கச் சாவடிக்கு அருகிலுள்ள ஜாலான் ராசா-மாம்பாவ் வழியாகக் காரில் பயணித்த இரண்டு பேர் சுடப்பட்டனர். அவர்களில் ஒருவர் செரம்பான் துவாங்கு ஜாஃபார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு பாதிக்கப்பட்டவரது உடல் நிலை சீராக இருப்பதாக அஸஹார் அப்துல் ரஹிம் தெரிவித்தார்.




















