குவந்தான்:
பகாங் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெள்ளப் பாதிப்பு தற்போது படிப்படியாகக் குறைந்து வருகிறது.
இன்று (புதன்கிழமை) காலை 8:30 மணி நிலவரப்படி, தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை 79 ஆகக் குறைந்துள்ளது. சமூக நலத்துறையின் (JKM) ‘Infobencana’ செயலியின் தரவுகளின்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 27 குடும்பங்களைச் சேர்ந்த 79 பேர் அங்குள்ள 4 நிவாரண மையங்களில் (PPS) தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கை நேற்று மாலை, அங்குள்ள 5 நிவாரண மையங்களில் 29 குடும்பங்களைச் சேர்ந்த 86 பேராக இருந்தது.
நீர் வடிந்து வந்தாலும், ‘Infobanjir’ இணையதளத் தகவலின்படி, பெக்கான், பாலோ ஹினாய் (Paloh Hinai) பகுதியில் பாயும் பகாங் ஆறு (Sungai Pahang) இன்னும் ஆபத்தான மட்டத்திலேயே (Danger Level) நீடிக்கிறது. எனவே, ஆற்றோரம் வசிக்கும் மக்கள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.




















