ஜோகூர், சிலாங்கூர், சரவாக், பேராக், மலாக்கா, நெகிரி செம்பிலான், பகாங், சபா ஆகிய மாநிலங்களின் தொடர்ச்சியான கடப்பாடுகளுக்கும் பரிவுத் திட்டங்களுக்கும் தேசிய உயர்கல்வி நிதியகம் (PTPTN) மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
தேசிய கல்வி சேமிப்புக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் மாநில அரசாங்கங்கள் அவற்றின் 2026 பட்ஜெட்டில் PTPTN கல்விக் கடனைத் திருப்பித் தருவதற்கும் Simpan SSPN திட்டத்திற்கும் உதவித் திட்டங்களை அறிவித்துள்ளன.
ஜோகூர் மாநிலம் 2025 நவம்பர் 13ஆம் தேதி 2026 பட்ஜெட்டை அறிவித்தது. அதில் பந்துவான் காசே ஜோகூர் (BKJ) அல்லது ஜோகூர் மாநில ஆதரவற்ற பிள்ளைகள் திட்டத்திற்கு 24.6 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியிருக்கிறது. இதிலிருந்து ஒவ்வொரு பிள்ளைக்கும் தலா 2,000 ரிங்கிட் ரொக்க வடிவில் Simpan SSPN சேமிப்பில் வைக்கப்படும். இதன் வழி 12,307 ஆதரவற்ற பிள்ளைகள் பயன்பெறுவர்.
சிலாங்கூர் மாநில அரசாங்கம் அதன் 2026 பட்ஜெட்டை 2025 நவம்பர் 14ஆம் தேதி சமர்ப்பித்தது. ANAS எனப்படும் சிலாங்கூர் இல்திஸாம் பிள்ளைகள் திட்டத்திற்கு 3 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து சிலாங்கூரில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு 100 ரிங்கிட் என 5 ஆண்டுகளுக்கு சேமிப்பில் வைக்கப்படும். இத்திட்டத்தில் 30,000 குழந்தைகள் பயன்பெறுவர்.
2025 நவம்பர் 24ஆம் தேதி சரவாக் மாநில அரசாங்கம் அதன் 2026 பட்ஜெட்டை அறிவித்து சரவாக் மாநிலப் பிள்ளைகள் PTPTN கல்விக் கடனைத் திருப்பித் தரும் திட்டத்திற்கு 15 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியது.
பேராக் மாநில அரசாங்கம் அதன் 2026 பட்ஜெட்டை 2025 நவம்பர் 25ஆம்தேதி சமர்ப்பித்தது. அதில் பேராக் குழந்தைகள் கல்வி சேமிப்பு நிதிக்கு ( TASPEN ) ஒரு மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியது. இத்திட்டத்தின் கீழ் 13 வயதுக்குக் கீழ்ப்பட்ட பேராக்கில் பிறந்த பிள்ளைகளுக்கு Simpan SSPN Prime கணக்கில் 200 ரிங்கிட் சேமிப்பில் வைக்கப்படும்.
2025 டிசம்பர் 5ஆம் தேதி மலாக்கா மாநில அரசாங்கம் அறிவித்த 2026 பட்ஜெட்டில் MesRa Bayi திட்டத்திற்கு 2 லட்சம் ரிங்கிட்டை ஒதுக்கியது. இத்திட்டத்தின் கீழ் மலாக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு Simpan SSPN Prime கணக்கில் 50 ரிங்கிட் வரவு வைக்கப்படும். அதேசமயம் பட்ஜெட் அறிவிப்பு தினத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா 150 ரிங்கிட் ஊக்கத் தொகை வழங்கப்படும்.
நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கம் 2026 பட்ஜெட்டை 2025 டிசம்பர் 5ஆம் தேதி அறிவித்து புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா 100 ரிங்கிட்டை Simpan SSPN கணக்கில் வரவு வைப்பதற்கு 1.6 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியது.
2025 டிசம்பர் 5ஆம் தேதி தன்னுடைய 2026 பட்ஜெட்டை அறிவித்த பகாங் மாநில அரசாங்கம் பெர்மாத்தா மக்மோர் திட்டத்திற்கு 6.5 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியது. அதேசமயம் பகாங் மாநிலத்தைச் சேர்ந்த முதல் பட்டதாரிகளுக்கு PTPTN கடனைக் குறைப்பதற்கு உதவுவதற்கும் இந்த ஒதுக்கீடு பயன்படுத்தப்படும். மேலும் 2025இல் பணியைத் தொடங்கும் பகாங் மாநிலப் பட்டதாரிகளுக்காக 7 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
சபா மாநில அரசாங்கம் அதன் 2026 பட்ஜெட்டை 2025 டிசம்பர் 12ஆம் தேதி அறிவித்ததோடு உயர்கல்வி நிலையங்களில் பதிந்துகொள்வதற்கு ஒரே தடவை ரொக்க உதவித்தொகை வழங்கும் நடப்புத் திட்டத்தை தொடர்வதாகக் கூறியது.
இதனிடையே மாநில அரசாங்கங்களின் இந்த அறிவிப்பானது சிறந்த மனித மூலதனத்தை உருவாக்கும் தங்களது திட்டத்தில் கல்விக்குத் தந்திருக்கும்
முன்னுரிமையையும் கடப்பாட்டையும் பார்க்க முடிகிறது என்று PTPTN தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ நோர்லிஸா அப்துல் ரஹிம் கூறினார்.





















