“Op Luxury” நடவடிக்கை; நெகிரி செம்பிலானில் RM21 மில்லியன் மதிப்பிலான 106 சொகுசு வாகனங்கள் பறிமுதல்!

சிரம்பான்:

நெகிரி செம்பிலான் மாநில சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) இந்த ஆண்டு நடத்திய ‘Op Luxury’ அதிரடிச் சோதனையில், சுமார் RM21 மில்லியன் மதிப்பிலான 106 சொகுசு வாகனங்களை பறிமுதல் செய்துள்ளது.

இது குறித்து நெகிரி செம்பிலான் ஜேபிஜே (JPJ) இயக்குனர் ஹனிப் யூசாப்ரா யூசுப் கூறுகையில், 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் உரிமையாளர்கள் விதிகளைப் பின்பற்றத் தவறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

குறிப்பாக காலாவதியான சாலை வரி (Road Tax), முறையான காப்பீடு (Insurance) இல்லாதது, செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாதது போன்ற காரணங்களால் இந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes A, C, E, S-Class), போர்ஷே (Porsche Macan, Cayenne, Panamera, Taycan), பிஎம்டபிள்யூ (BMW), ஆடி (Audi) மற்றும் டொயோட்டா அல்ஃபார்ட் (Alphard), வெல்பயர் (Vellfire) போன்ற விலையுயர்ந்த ரகங்களும் அடங்கும்.

“இந்த நடவடிக்கையில் சிக்கிய வாகன உரிமையாளர்கள் 35 முதல் 55 வயதுக்குட்பட்டவர்கள். இதில் ‘டத்தோ’ (Datuk) பட்டம் பெற்ற ஒரு தொழிலதிபரும் அடங்குவார். கடந்த ஆண்டு வெறும் 20 வாகனங்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 80 சதவீத உயர்வுடன் இதுவே எங்களது மிகப்பெரிய வேட்டையாகும்,” என்று ஹனிப் யூசாப்ரா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும் இந்தச் சோதனையின் போது சாலை வரி தொடர்பான 318 நோட்டீஸ்களும் வழங்கப்பட்டன. பதிவு செய்யப்படாத அல்லது சட்டவிரோதமாக வைத்திருக்கும் சொகுசு வாகனங்களைக் கண்டறிய நாடு தழுவிய அளவில் இத்தகைய சோதனைகள் தொடரும் என்றும் அவர் எச்சரித்தார்.

மேலும், போக்குவரத்து விதிமீறல்கள் குறித்துப் பொதுமக்கள் MyJPJ செயலி (e-Aduan) வழியாகவோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ புகார் அளிக்கலாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here