வடமேற்கு நைஜீரியாவில் ஐஎஸ்ஐஎஸ் மீது அமெரிக்க வான்வழித் தாக்குதல்

புளோரிடா:

வடமேற்கு நைஜீரியாவில் செயல்பட்டு வந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

நைஜீரிய அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் வியாழக்கிழமை (டிசம்பர் 25) தெரிவித்தனர்.

அந்தப் பகுதியில் வாழ்ந்து வந்த கிறிஸ்துவர்களை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்கியதாக நம்பப்படுகிறது. இது குறித்து அதிபர் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகப் பதிவில்,

“இன்று இரவு, எனது உத்தரவின் பேரில், வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா சக்திவாய்ந்த தாக்குதலை தொடங்கியுள்ளது. பல ஆண்டுகளாக, அப்பாவி கிறிஸ்துவர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் கொடூரமான கொலைகளை நிகழ்த்தி வருகின்றனர்,” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ராணுவத்தின் ஆப்பிரிக்கத் தளபதி (AFRICOM), நைஜீரிய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் சோகோடோ மாநிலத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதில் பல ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் அறிவித்தது.

முன்னதாக AFRICOM வெளியிட்ட எக்ஸ் (X) பதிவில், நைஜீரிய அரசாங்கத்தின் வேண்டுகோளின் அடிப்படையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் அந்தப் பதிவு அகற்றப்பட்டது.

கடந்த அக்டோபர் மாத இறுதியில், நைஜீரியாவில் கிறிஸ்துவர்கள் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்தார். கிறிஸ்துவ சமூகங்களை குறிவைக்கும் வன்முறையை கட்டுப்படுத்தத் தவறினால், அமெரிக்க ராணுவ தலையீடு இருக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கிடையில், நைஜீரிய வெளியுறவு அமைச்சகம், அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகவே இந்த வான்வழித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here