சூரி நருடின் கொலை வழக்கு: 51 வயது ஆடவர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கோலாலம்பூர் –

53 வயதுடைய தொழிலதிபர் சூரி நருடின் (Suri Narudin) கொலை செய்யப்பட்டு, உடல் பையில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், இன்று 51 வயது ஆடவர் மீது தம்பின் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

மாவட்ட நீதிமன்ற நீதிபதி முகமட் ரெட்ஸா அஸார் ரெஸாலி (Mohamad Redza Azhar Rezali) முன்னிலையில் வாசிக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கையை, குற்றம் சாட்டப்பட்ட ஸைனிஸான் ஸைனால் (Zainizan Zainal) என்ற அந்த ஆடவர் கேட்டுக்கொண்டார். எனினும், இக்கொலை வழக்கானது உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால், மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் அவரிடமிருந்து எந்த ஒரு குற்ற ஒப்புதலும் பதிவு செய்யப்படவில்லை.

குற்றப்பத்திரிக்கையின்படி, கடந்த டிசம்பர் 7 முதல் 18-ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில், நெகிரி செம்பிலான், ஜாலான் பெசார் – லிங்கி அருகிலுள்ள வீட்டின் பின்புறம் சூரி நருடினைக் கொலை செய்ததாக ஸைனிஸான் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு தண்டனைச் சட்டம் பிரிவு 302-ன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது, 30 முதல் 40 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனை மற்றும் குறைந்தது 12 கசையடிகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here