மலேசிய-தாய்லாந்து காவல்துறையின் கூட்டு நடவடிக்கை: RM4.31 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; தம்பதி உட்பட நால்வர் கைது!

ஜார்ஜ் டவுன்:

லேசிய மற்றும் தாய்லாந்து போதைப்பொருள் தடுப்புப் காவல்துறையினரின் கூட்டு உளவுத்தகவல் நடவடிக்கையின் மூலம் பன்னாட்டு போதைப்பொருள் கடத்தல் கும்பல் முடக்கப்பட்டது.

சிலாங்கூர் மற்றும் பினாங்கில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் தம்பதியர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டதுடன், RM4.31 மில்லியன் மதிப்புள்ள 86 கிலோ ‘மெத்தாம்பேட்டமைன்’ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி தாய்லாந்தின் ஹுவா ஹின் பகுதியில் 166 கிலோ போதைப்பொருளுடன் மலேசியர் ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தாய்லாந்து காவல்துறை அளித்த உளவுத்தகவலின் அடிப்படையில் இந்த ‘ஓப் சோராவ் தெர்ரா’ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பினாங்கு மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ டெனிஸ் லிம் குவாங் கெங் தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் 13 அன்று, சிலாங்கூரில் கடத்தலில் ஈடுபட்ட இரு உள்நாட்டு ஆண்கள் மற்றும் அவர்களில் ஒருவரின் மனைவியான தாய்லாந்து பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.

அதேநேரம் ஆகஸ்ட் 14 இல் பட்டர்வொர்த்திலுள்ள ஹோட்டலின் கார் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிசான் டீனா (Nissan Teana) காரின் பின்புறப் பெட்டியில் அமைக்கப்பட்டிருந்த ரகசிய அறையிலிருந்து 86 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் 19 வயது இளைஞர் ஒருவரும் கைதானார்.

மாற்றியமைக்கப்பட்ட மலேசியப் பதிவு எண்கொண்ட வாகனங்களைப் பயன்படுத்தி தாய்லாந்திலிருந்து மலேசியாவிற்குள் போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தீவிரமாக இயங்கிவரும் இக்கும்பல், மலேசியாவை ஒரு இடைத்தாவளமாகப் பயன்படுத்தி உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளுக்கு போதைப்பொருளை விநியோகித்து வந்தது கண்டறியப்பட்டது.

ஒவ்வொரு கடத்தல் நடவடிக்கைக்கும் இவர்களுக்கு RM6,000 வரை கூலியாக வழங்கப்பட்டுள்ளது. இக்கும்பலின் முக்கிய சூத்திரதாரி தாய்லாந்தில் செயல்பட்டு வருவதுடன், அவரைப் பிடிக்கும் முயற்சியில் இரு நாட்டு அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இச்சோதனையின் போது 19 முதல் 25 வயதுக்குட்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து RM420,700 மதிப்புள்ள 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்குப் போதைப்பொருள் பயன்படுத்திய சோதனையில் ‘கெட்டமைன்’ உறுதி செய்யப்பட்டுள்ளது. இ வழக்கு அபாயகர போதைப்பொருள் சட்டம் 1952 பிரிவு 39B-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here