Endau பாலத்தில் விரைவுப் பேருந்து – டிரெய்லர் நேருக்கு நேர் மோதல்; அதிர்ஷ்டவசமாக தப்பிய 30 பயணிகள்!

ரொம்பின்:

பஹாங் மற்றும் ஜோகூர் மாநிலங்களின் எல்லையில் உள்ள என்டாவ் (Endau) பாலத்தில், விரைவுப் பேருந்தும் டிரெய்லரும் மோதி விபத்துக்குள்ளானதில், 30 பயணிகள் எவ்விதக் காயமுமின்றி உயிர் தப்பினர்.

நேற்று இரவு 11.20 மணியளவில், ஜொகூர் பாருவில் இருந்து கிளந்தான் நோக்கி விரைவுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அதே நேரத்தில், குவாந்தானில் இருந்து ஜோகூர் பாரு நோக்கி இரும்புச் சுமைகளை ஏற்றி வந்த டிரெய்லர் ஒன்று என்டாவ் பாலத்தைக் கடக்கும்போது கட்டுப்பாட்டை இழந்தது.

கட்டுப்பாட்டை இழந்த டிரெய்லர் வலதுபுறப் பாதைக்குள் நுழைந்து, எதிரே வந்த எக்ஸ்பிரஸ் பேருந்தின் மீது பலமாக மோதியது என்று,ரொம்பின் மாவட்டப் போலீஸ் தலைவர் சூப்பரின்டெண்டண்ட் ஷரீப் ஷாய் ஷரீப் மொண்டோய் கூறினார்.

விபத்தின் போது பேருந்தில் 7 முதல் 50 வயதுக்குட்பட்ட 30 பயணிகள் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக, பேருந்து மற்றும் டிரெய்லர் ஓட்டுநர்கள் உட்பட பயணிகள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

விபத்து நடந்த ஒரு மணி நேரத்திற்குள், பயணிகள் அனைவரும் மாற்றுப் பேருந்து மூலம் தங்களது சென்றடைய வேண்டிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

டிரெய்லர் ஓட்டுநரின் கவனக்குறைவால் இந்த விபத்து நேரிட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 1959-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்து விதிகளின் கீழ் (அலட்சியமாக வாகனம் ஓட்டுதல்) போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here