UiTM உடல்திறன் சவால் போட்டியில் சோகம்: 21 வயது மாணவர் உயிரிழப்பு, 8 பேர் மருத்துவமனையில் அனுமதி!

குவாந்தான்:

பகாங், மாரானில் உள்ள UiTM ஜெங்கா வளாகத்தில் நடைபெற்ற ‘கொமாண்டர் கெசாத்ரியா’ (KKEC 2026) உடல்திறன் சவால் போட்டியில் பங்கேற்ற 21 வயது பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 8 மாணவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் நெகிரி செம்பிலான் UiTM கிளையைச் சேர்ந்த ஃபாத்லான் ஃபக்ரி சொலானா முகமட் ஃபெலிமால் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான வானிலை காரணமாக மாணவர்கள் அனைவரும் மயக்கமடைந்து விழுந்ததாக நம்பப்படுகிறது.

பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே மேலதிக விவரங்கள் தெரியும் என மாரான் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ரிண்டண்டெண்ட் வோங் கிம் வாய் தெரிவித்தார்.

இச்சோகச் சம்பவத்தைத் தொடர்ந்து, போட்டியில் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து வெளிப்புற நிகழ்வுகளையும் UiTM நிர்வாகம் உடனடியாக ரத்து செய்துள்ளது.

உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்குத் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள UiTM நிர்வாகம், இறுதிச் சடங்கு மற்றும் குடும்பத்திற்கான அனைத்து உதவிகளையும் முழுமையாகப் பொறுப்பேற்றுச் செய்வதாக அறிவித்துள்ளது.

செப்டம்பர் 2 முதல் 8 வரை நடைபெறும் இந்த தேசிய அளவிலான வருடாந்திர போட்டியில், பங்கேற்பாளர்களுக்கு முறையான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் கடுமையான வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்ட போதிலும் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here