கோலாலம்பூர், டிசம்பர் 28 –
சாலை வரி செலுத்தத் தவறிய சொகுசு வாகன உரிமையாளர்களுக்கு எதிராக, சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) மேற்கொண்டுவரும் ‘ஓப்ஸ் லக்சரி’ (Op Luxury) நடவடிக்கையின் கீழ், கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் இதுவரை 915 சொகுசு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பல மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஆஸ்டன் மார்ட்டின், பெராரி, லம்போகினி, ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட உயர் தர வாகனங்கள் இந்த நடவடிக்கையில் சிக்கியுள்ளன. 3 லட்சம் ரிங்கிட்டிற்கும் அதிக மதிப்புள்ள வாகனங்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள், நாட்டின் அடிப்படை சட்டப்பூர்வ கடமையான சாலை வரியை செலுத்தத் தவறியிருப்பது, சமூகத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
சில உரிமையாளர்கள் “மறந்துவிட்டோம்”, “நிதி நெருக்கடி” போன்ற காரணங்களை முன்வைத்தாலும், இத்தகைய விளக்கங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என ஜே.பி.ஜே தெரிவித்துள்ளது. அனைத்து சொகுசு வாகனங்களும் தற்போது தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன என, ஜே.பி.ஜே மூத்த அமலாக்க இயக்குநர் முகமட் கிஃப்லி மா ஹசான் கூறினார்.
இந்த நடவடிக்கையின் போது,
- லம்போகினி ஹுராகான் ரக கார் ஒன்று மட்டும் 35,760 ரிங்கிட் சாலை வரி நிலுவை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- ஆடி ஏ8 (Audi A8) வாகனம் 21,710 ரிங்கிட் வரி நிலுவை வைத்திருந்தது.
- சில வாகனங்கள் 2021-ஆம் ஆண்டு முதல் சாலை வரியைப் புதுப்பிக்காமலே இயக்கப்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும், பி.எம்.டபிள்யூ ஐ7 (BMW i7) ரக கார் ஒன்று போலி பதிவு எண்ணைப் பயன்படுத்தியிருந்ததும் சோதனையில் அம்பலமாகியுள்ளது.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்த ஜே.பி.ஜே இயக்குநர் டத்தோ ஏடி ஃபட்லி ரம்லி,
“சொகுசு வாகன உரிமையாளர்கள் உடனடியாக தங்களின் சாலை வரியைப் புதுப்பிக்க வேண்டும். விதிமீறல் தொடருமானால், எந்த நேரத்திலும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்”
என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.
சாலை சட்டங்களை மீறுவதில் யாருக்கும் விதிவிலக்கு இல்லை என்பதை இந்த ‘ஓப்ஸ் லக்சரி’ நடவடிக்கை தெளிவாக எடுத்துக்காட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

























