கோலா கங்சாரில் தொலைத்தொடர்பு கோபுரத் தீ விபத்து: பல பகுதிகளில் சேவை பாதிப்பு – MCMC அதிரடி நடவடிக்கை!

கோலாலம்பூர்:

பேராக் மாநிலம், கோலா கங்சார் (Kuala Kangsar) அருகே உள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், அப்பகுதியைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி:
நேற்று மாலை சுமார் 6.50 மணியளவில், கம்போங் கெலிபோர் (Kampung Kelebor) பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

மேக்சிஸ் (Maxis) நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தக் கோபுரத்தில், CelcomDigi மற்றும் மேக்சிஸ் நிறுவனங்களின் அலைவரிசை கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன.

இந்தத் தீ விபத்தினால் CelcomDigi, Maxis மற்றும் Unifi Mobile பயனர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக பின்வரும் பகுதிகளில் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது: கம்போங் கெலிபோர், கம்போங் லங்காப் கெடியோர், கம்போங் ரம்பாய் 7 மற்றும், கம்போங் மெனோரா, கம்போங் செங்காங், கம்போங் உலு கெனாஸ் மற்றும் கம்போங் லெம்போர் என்பன சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் (PLUS) உள்ள சுங்கை பேராக் ஓய்வுப் பகுதி (R&R) சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்புத் துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட முகமைகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. பாதுகாப்பு கருதி அந்த இடத்திற்குச் செல்ல தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை பயணிகளின் வசதிக்காக, சுங்கை பேராக் ஓய்வுப் பகுதியில் (வடக்கு நோக்கிச் செல்லும் பாதை) ஸ்டார்லிங்க் (Starlink) வசதியுடன் கூடிய தற்காலிக செயற்கைக்கோள் வைஃபை (Satellite WiFi) சேவையை MCMC செயல்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட சேவை நிறுவனங்கள் உடனடியாகச் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், சேவையை மீட்க விரிவான திட்டத்தை அமல்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு கோபுரங்களின் நம்பகத்தன்மை மற்றும் பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, தொழில்நுட்ப ஆய்வுகள் மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறு கோபுர உரிமையாளர்களுக்கு MCMC அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here