கோலாலம்பூர்:
மலேசியாவில் தற்போது டுரியான் பழங்களின் விளைச்சல் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதால், அதன் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. இதனை உள்ளூர் மக்கள் மற்றும் வணிகர்கள் ‘டுரியான் சுனாமி’ என்று அழைத்து வருகின்றனர்.
நீண்ட காலத்திற்குப் பிறகு மலேசியாவின் டுரியான் தோட்டங்கள் அனைத்திலும் ஒரே நேரத்தில் பழங்கள் அறுவடைக்கு வந்துள்ளன. குறிப்பாகப் பகாங் மற்றும் ஜோகூர் மாநிலங்களில் விளைச்சல் மிக அதிகமாக உள்ளது.
மேலும் மலேசிய டுரியான்களின் முக்கிய சந்தையான சீனாவில் நிலவும் பொருளாதார மந்தநிலை காரணமாக, அங்கிருந்து வரும் ஆர்டர்கள் குறைந்துள்ளன. இதனால் ஏற்றுமதியாக வேண்டிய பழங்கள் உள்ளூர் சந்தைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
தற்போது மலேசியாவில் பள்ளி விடுமுறை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இருப்பதால், மக்கள் மற்ற செலவுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாலும் டுரியான் விற்பனை எதிர்பார்த்த அளவை விட மந்தமாக உள்ளது.
கடந்த காலங்களில் ஒரு கிலோ 80 ரிங்கிட் வரை விற்கப்பட்ட உயர்தர ‘மூசாங் கிங்’ (Musang King) ரக டுரியான்கள், தற்போது சில இடங்களில் கிலோ வெறும் 10 ரிங்கிட் வரை சரிந்துள்ளன.
பெட்டாலிங் ஜெயாவின் பிரபல ‘SS2’ டுரியான் மையத்தில், ஒரு பிளாஸ்டிக் பை நிறைய (சுமார் 15 கிலோ) மூசாங் கிங் டுரியான்களை வெறும் 133 ரிங்கிட் (S$42.30) என்ற விலைக்கு அள்ளிக்கொள்ளும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
‘நான்கு வாங்கினால் ஒன்று இலவசம்’ போன்ற சலுகைகள் மூலம் தேக்கமடைந்துள்ள பழங்களை விற்றுத் தீர்க்க வியாபாரிகள் முயற்சி செய்து வருகின்றனர்.
விலை வீழ்ச்சி நுகர்வோருக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், டுரியான் தோட்ட உரிமையாளர்களுக்கு இது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நிலத்தை வாடகைக்கு எடுத்துப் பயிரிடும் விவசாயிகளுக்குப் பராமரிப்புச் செலவைக் கூட ஈடுகட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகப் பண்ணை உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.




















