கிள்ளானில் துப்பாக்கிச் சூடு: 43 வயது நபர் பலி – தப்பியோடிய இரு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

கிள்ளான்:

கிள்ளான் தெற்குப் பகுதியில் இன்று அதிகாலை நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் தப்பியோடிய இரு சந்தேக நபர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இன்று (ஜனவரி 7, 2026) அதிகாலை சுமார் 12.30 மணியளவில் கிள்ளான் தெற்கு போலீசாருக்குத் துப்பாக்கிச் சூடு குறித்த தகவல் கிடைத்தது என்று, சிலாங்கூர் மாநிலத் துணைப் போலீஸ் தலைவர் முகமட் சைனி அபு ஹசன் கூறினார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அங்கு 43 வயது மதிக்கத்தக்க ஒரு உள்ளூர் நபர் உயிரிழந்து கிடப்பதைக் கண்டனர்.

முதற்கட்ட விசாரணையின்படி, மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்கள், பாதிக்கப்பட்ட நபரை நோக்கி இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியது தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் கிள்ளான், தெங்கு அம்புவான் ரஹிமா (HTAR) மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கிள்ளான் தெற்கு குற்றப் புலனாய்வுத் துறை இச்சம்பவத்தைத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 (கொலை குற்றம்)-இன் கீழ் விசாரித்து வருகிறது.

தப்பியோடிய குற்றவாளிகளைக் கண்டறிய அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்த தகவல் தெரிந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here