கோலாலம்பூர்:
தொழிலாளர்கள் நீதிமன்றத்திற்குத் தேடி வருவதை விட, நீதிமன்றமே தொழிலாளர்களைத் தேடிச் செல்லும் வகையில் ‘நடமாடும் தொழிலாளர் நீதிமன்றங்கள்’ (Mobile Labour Courts) திட்டத்தை 2026-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்த மனிதவள அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இத்திட்டம் 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் தீபகற்ப மலேசியாவில் செயல்பாட்டுக்கு வரும் என்று,
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்தார்.
முதற்கட்டமாக 3 நடமாடும் நீதிமன்ற வாகனங்களை இயக்குவதற்காக 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற அவர், கிராமப்புறம் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் நீதிமன்றத்திற்கு வரத் தேவையான பயணச் செலவு, நேர விரயம் மற்றும் ஊதிய இழப்பு ஆகியவற்றை இது பெருமளவு குறைக்கும். “நாங்கள் நீதியைத் தேடிப் போவதை எளிதாக்க விரும்புகிறோம், தொழிலாளர்களைக் கஷ்டப்படுத்த அல்ல” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
தற்போதுள்ள தொழிலாளர் நீதிமன்றங்களை நவீனப்படுத்தவும் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக 1.8 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் டிஜிட்டல் நீதிமன்றங்களின் எண்ணிக்கை 12-லிருந்து 18-ஆக உயர்த்தப்படும் என்றும், ஈப்போ, அலோர் ஸ்டார், மூவார், ரவாங், குவாந்தான் மற்றும் கோலா திரங்கானு ஆகிய இடங்களில் புதிய டிஜிட்டல் பதிவு வசதி கொண்ட நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
இத்திட்டத்தின் மூலம் வழக்குகளின் விசாரணை விரைவுபடுத்தப்படும், வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் மற்றும் தரவுகள் முறையாகப் பாதுகாக்கப்படும்.
இந்தச் சேவைகளை மேலும் வலுப்படுத்த, தொழிலாளர் துறை (JTKSM), தொழிற்சங்க விவகாரத் துறை மற்றும் தொழில் உறவுகள் துறை ஆகிய மூன்று துறைகளையும் ஒருங்கிணைக்க அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அதிகாரிகள் பற்றாக்குறை நீக்கப்பட்டு, தொழிலாளர் சட்டங்கள் இன்னும் கடுமையாக அமல்படுத்தப்படும் என்றார் அவர்.




















