கோலாலம்பூர்:
ஜோகூர் பாருவில் பொது இடங்களில் குப்பை போட்டதற்காக மூன்று சிங்கப்பூரர்கள் உட்பட ஐந்து பேருக்கு அபராத நோட்டீஸ் (Compound Notices) வழங்கப்பட்டுள்ளது. மலேசியாவில் ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய சமூகச் சேவைத் திட்டத்தின் (Community Service Order) கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜோகூர் பாருவில் உள்ள கே.எஸ்.எல் (KSL) சிட்டி மால் மற்றும் லர்கின் ஜெயா ஆகிய பகுதிகளில் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையின் போது, சிகரெட் துண்டுகள் மற்றும் சிறு குப்பைகளை வீசியவர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டனர்.
இது குறித்து வீடமைப்பு மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஙா கொர் மிங் (Nga Kor Ming) கூறுகையில், “பொது இடங்களில் குப்பை போடலாம் என்று அவர்கள் நினைத்தார்கள்; ஆனால் இப்போது அது முடியாது. சிங்கப்பூர் தூய்மையாக இருப்பதை நாம் விரும்புகிறோம், மலேசியா அதைவிடத் தூய்மையாக இருக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.
புதிய சட்டத்தின்படி, குப்பை போடுவோருக்கு 2,000 ரிங்கிட் முதல் 10,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம். அதோடு, 12 மணிநேரம் வரை பொது இடங்களைச் சுத்தம் செய்யும் ‘சமூகச் சேவை’ தண்டனையும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்தச் சட்டம் தற்போது ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், பகாங், பெர்லிஸ், கெடா மற்றும் கோலாலம்பூர், புத்ராஜெயா ஆகிய பகுதிகளில் முழுமையாக அமலுக்கு வந்துள்ளது.
கோலாலம்பூரில் மட்டும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது குப்பை போட்ட 120 பேருக்கு அபராத நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
பினாங்கு, சிலாங்கூர், கிளாந்தான் மற்றும் திரெங்கானு ஆகிய மாநிலங்களில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் இந்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்றார் அவர்.
நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில், தேசிய அளவில் 10 பொதுச் சந்தைகளை (Markets) முன்னோடி சுற்றுலாத் தலங்களாக மேம்படுத்த 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அறிவித்தார்.
ஒவ்வொரு சந்தையும் அந்தந்த மாநிலத்தின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.





















