RM3,000 கடனைக் கட்டி முடிக்கும்வரை கட்டாய உழைப்பு; இரு இந்தோனேசியப் பெண்கள் மீட்பு!

கோலாலம்பூர்:

சிலாங்கூரில் இந்த மாத தொடக்கத்தில் குடிநுழைவுத் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில், மனிதக் கடத்தல் மற்றும் கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தப்பட்ட இரண்டு இந்தோனேசியப் பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

38 மற்றும் 54 வயதுடைய குறித்த பெண்கள் இருவரும் வீட்டு வேலைக்காக ஏஜெண்டுகள் மூலம் மலேசியா வந்தனர், இவர்கள் முறையாகப் பதிவு செய்யப்படாத ஒரு ஏஜென்சி மூலம் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அந்த ஏஜென்சி வாட்ஸ்அப் (WhatsApp) வழியாக இந்த சேவையை விளம்பரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் முதல் பெண்மணிக்கு பயணச் செலவு என்ற பெயரில் RM3,000 கடன் விதிக்கப்பட்டு, அவரது மாதச் சம்பளத்தில் இருந்து அதைக் கழிக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார் என்று, குடிநுழைவுத்துறை டைரக்டர் ஜெனரல் டத்தோ ஜகாரியா ஷபான் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 6, கப்பாார், கிள்ளானில் மீட்கப்பட்ட பெண், சமூக வருகை பாஸ் (Social Visit Pass) மூலம் மலேசியாவிற்குள் வந்து, வீட்டு வேலைக்கு கட்டாயப்படுத்தப்பட்டார். அவரை வேலைக்கு அமர்த்த முதலாளியிடம் இருந்து அந்த ஏஜென்சி RM8,000 வசூலித்துள்ளது.

இரண்டாவதாக ஜனவரி 12, புக்கிட் ஜெலுத்தோங்கில் மீட்கப்பட்ட பெண்ணை, ஒரு குடியிருப்புப் பகுதியில் உணவு வணிகம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டிருந்தது என்றும், இவரது பாஸ்போர்ட் மற்றும் செல்போன் பறிக்கப்பட்டதோடு, இவர் உடல் மற்றும் மன ரீதியான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இவரை வழங்க ஏஜென்சி RM14,000 வரை பணம் பெற்றுள்ளது.

இந்தக் கடத்தல் கும்பலுக்கு உதவியதாக 38 வயதுடைய ஒரு ஏஜென்ட் உட்பட இரண்டு உள்ளூர் நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது மனிதக் கடத்தல் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here