வறண்ட காலநிலையில் குப்பைகளை எரிக்க வேண்டாம்; தீயணைப்புத் துறை எச்சரிக்கை!

ஜார்ஜ் டவுன்:

பினாங்கு மாநிலத்தில் நிலவும் கடும் வெயில் மற்றும் வறண்ட வானிலை காரணமாக, காலி நிலங்கள், தோட்டங்கள் மற்றும் கழிவு மேலாண்மை பகுதிகளில் தீ விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகத் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

சிறிய நெருப்பும் ஆபத்தை விளைவிக்கும் என்றும், வீட்டுக் கழிவுகளை எரிக்கப் பயன்படுத்தப்படும் சிறிய நெருப்பு கூட, பலத்த காற்றினால் கட்டுக்கடங்காத புதர் தீயாக மாறக்கூடும். எனவே, கழிவுகளை அங்கீகரிக்கப்பட்ட இடங்களிலேயே அப்புறப்படுத்த வேண்டும் என்றும் , பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குனர் முகமது ஷோகி ஹம்சா பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும் சிகரெட் துண்டுகளை முழுமையாக அணைத்த பின்னரே குப்பையில் போட வேண்டும். ஓடும் வாகனங்களில் இருந்து எரியும் சிகரெட் துண்டுகளைச் சாலையோரம் வீசக்கூடாது; இது காய்ந்த புற்களில் பட்டுத் தீப்பற்ற வாய்ப்புள்ளது.

அத்தோடு காலி நிலங்கள் அல்லது வீடுகளை வைத்திருப்பவர்கள், தங்கள் சொத்துக்களைச் சுற்றியுள்ள காய்ந்த புதர்களை அகற்ற வேண்டும். காய்ந்த புற்கள் தீப்பற்றினால் அது அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவக்கூடும்.

முகாம்களில் (Camping) நெருப்பு மூட்டுபவர்கள், அந்த இடத்தை விட்டு வெளியேறும் முன் நெருப்பு முழுமையாக அணைக்கப்பட்டுவிட்டதை உறுதி செய்ய வேண்டும்.

ஜனவரி தொடக்கத்தில் இருந்து இதுவரை பினாங்கில் மொத்தம் 88 தீ விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here