கூலிம் சாலை விபத்து: இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் பலி!

கூலிம்:

இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், ஒரு காரில் பயணம் செய்த ஒரு முதியவர் மற்றும் இரண்டு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இன்று (ஜனவரி 18, 2026) மாலை சுமார் 5.09 மணியளவில் கெடா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்தது. ஜாலான் சுங்கை கோப் சாலையில் இரண்டு கார்கள் மோதிக்கொண்டதில், அவை கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் சரிந்தன என்று, கூலிம் ஹை-டெக் தீயணைப்பு நிலையத் தலைவர் அஸ்மிர் ஹசன் கூறினார்.

இந்த விபத்தில் ஒரு காரின் ஓட்டுநர் காருக்குள் சிக்கிக் கொண்டார். காரில் இருந்த இரண்டு சிறுவர்கள் சுயநினைவின்றி காணப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பே பொதுமக்கள் அந்த இரண்டு சிறுவர்களையும் காரிலிருந்து மீட்டனர். ஓட்டுநரை மீட்கத் தீயணைப்பு வீரர்கள் சிறப்பு வெட்டும் கருவிகளைப் பயன்படுத்தினர்.

காரில் இருந்த மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

விபத்துக்குள்ளான மற்றொரு கார் மோதிய வேகத்தில் தீப்பற்றியது. அதிர்ஷ்டவசமாக, அந்த காரின் ஓட்டுநர் லேசான காயங்களுடன் தப்பினார். அவர் உடனடியாக சிகிச்சைக்காக கூலிம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இந்த விபத்து குறித்து போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here