மலேசியாவில் இறைச்சி, பால் உள்ளிட்ட கால்நடை சார்ந்த உணவுப் பொருட்கள் பாதுகாப்பானவை: DVS துறை விளக்கம்!

கோலாலம்பூர்:

மலேசியாவில் விற்கப்படும் இறைச்சி, பால் உள்ளிட்ட கால்நடை சார்ந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் நுகர்வுக்குப் பாதுகாப்பானவை என்று கால்நடை சேவைகள் துறை (DVS) தெரிவித்துள்ளது. கால்நடைகளில் நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன் (Antimicrobial Resistance – AMR) அதிகரிப்பதாக அண்மையில் வெளியான ஊடக அறிக்கைகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அண்மையில் சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளில், பண்ணைகளில் முறையற்ற ஆன்டிபயாட்டிக் (Antibiotics) பயன்பாட்டால் கால்நடைகளில் மருந்து எதிர்ப்புத் திறன் கொண்ட பாக்டீரியாக்கள் அதிகரிப்பதாகக் கூறப்பட்டிருந்தது. இது பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக DVS தெரிவித்துள்ளது.

இது குறித்து DVS வெளியிட்டுள்ள அறிக்கையில், மலேசியாவில் உள்ள இறைச்சிக் கூடங்களில் (Slaughter houses) கட்டாயக் கால்நடை பரிசோதனைகள் மற்றும் மருந்து எஞ்சியிருப்பைக் கண்டறியும் வருடாந்திர கண்காணிப்பு முறைகள் நீண்டகாலமாக நடைமுறையில் உள்ளன.

மேலும் இவை 1983-ஆம் ஆண்டு உணவுச் சட்டம் மற்றும் 1985-ஆம் ஆண்டு உணவு விதிமுறைகளின் கீழ் சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

2012-ஆம் ஆண்டு முதல், கால்நடைகளின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நோய் வராமல் தடுக்கவும் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான ஆன்டிபயாட்டிக் மருந்துகளுக்கு மலேசியா ஏற்கனவே தடை விதித்துள்ளது.

நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன் (AMR) என்பது பண்ணை அளவிலான மருந்து பயன்பாட்டால் மட்டுமே ஏற்படுவதல்ல. இது நோய்த் தாக்கம், பண்ணை உயிரியல் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் எனப் பல காரணங்களை உள்ளடக்கியது என்று DVS தெளிவுபடுத்தியுள்ளது.

பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, ‘ஒரே ஆரோக்கியம்’ (One Health) என்ற அணுகுமுறையின் கீழ் மனித ஆரோக்கியம், விலங்கு ஆரோக்கியம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறைகள் இணைந்து செயல்பட்டு வருவதாக அத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, சந்தையில் கிடைக்கும் அங்கீகரிக்கப்பட்ட கால்நடை உணவுப் பொருட்கள் குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், அவை தொடர்ந்து தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் DVS உறுதிபடத் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here