கோலாலம்பூர்:
கடந்த ஆண்டு, 301,650 PeKa B40 சுகாதாரப் பரிசோதனைத் திட்டப் பயனீடாளர்கள் கிட்டத்தட்ட 70% பேர், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு மற்றும் உடல் பருமன் போன்ற, குறைந்தது ஒரு தொற்று அல்லாத நோய் NCDயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இவர்களில், 25% பேர், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நோய்களால் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே குறைந்த வருமானம் கொண்ட பிரிவினரிடையே, இந்த நோய்களின் அதிகரிப்பு, நாட்டின் உற்பத்தித்திறனுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
மேலும், உலகச் சுகாதார அமைப்பு WHOவின் 2022-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, மலேசியாவில், 74% மரணங்களுக்கு, தொற்று அல்லாத நோய்களே காரணமாகும். இந்த மரணங்கள், பெரும்பாலும் உற்பத்தித் திறனுள்ள வயதினரிடையே நிகழ்கின்றன. 2019ஆம் ஆண்டு முதல், 6.9 மில்லியன் எஸ்டிஆர் (STR) பயனீட்டாளர்களில் வெறும் 1.6 மில்லியன் பேர் மட்டுமே, PEKA பி40 திட்டத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையை மாற்ற, புரோட்டெக்ட்ஹெல்த் (ProtectHealth) நிறுவனம், ஆயிரக்கணக்கான மருந்தகங்கள், மருத்துவமனைகள், ஆய்வகங்களுடன் இணைந்து, சுகாதாரப் பரிசோதனையை விரிவுபடுத்துவதோடு, நோய் வருவதற்கு முன்பே தடுப்பது குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.




















