சட்டவிரோத குடியேறிகளுக்குப் புகலிடம்: வங்காளதேச இளைஞருக்கு 2 ஆண்டு சிறை!

கோலாலம்பூர்:

மலேசியாவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைப் பாதுகாப்பாகப் பதுக்கி வைக்கும் ஒரு வீட்டின் காப்பாளராகச் செயல்பட்ட ரபி ஹொசைன் (21) என்ற வங்காளதேச இளைஞருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி, பெட்டாலிங் ஜெயா, பிரைமா டாமன்சாராவில் உள்ள ‘ரூமா பாங்சா ரம்பாய் இடாமன்’ (Rumah Pangsa Rampai Idaman) குடியிருப்பு பகுதியில் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர். அந்தச் சோதனையின் போது, ரபி ஹொசைன் மற்றும் நான்கு வங்காளதேசக் குடியேறிகள் ஒரு வீட்டில் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வீடு கடத்தல் கும்பலின் இடைத்தங்கல் முகாமாகச் செயல்பட்டது உறுதியானது.

கடந்த ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், 2007-ஆம் ஆண்டு மனிதக் கடத்தல் தடுப்பு மற்றும் குடியேறிகள் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் (பிரிவு 26H) கீழ் ரபி ஹொசைன் குற்றவாளி எனத் தீர்மானிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் கைது செய்யப்பட்ட தேதியிலிருந்து இந்தத் தண்டனைக் காலம் தொடங்கும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டவிரோதக் குடியேறிகளுக்கு வேலை வழங்குபவர்கள், அடைக்கலம் கொடுப்பவர்கள் அல்லது அவர்களுக்குத் துணையாகச் செயல்படும் உரிமையாளர்கள் மீது எவ்வித சமரசமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று, குடிவரவுத் துறை இயக்குநர் நாயகம் டத்தோ ஜகாரியா ஷாபான் கூறினார் .

மேலும் குடிநுழைவுச் சட்டங்களை மீறுபவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டாம் என்றும், சட்டவிரோதச் செயல்கள் குறித்துத் துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பைப் பேண இத்தகைய அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here