இஸ்கந்தர் புத்ரி:
கெலாங் பாத்தாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த 46 வயது இந்தியக் குடிமகன் ஒருவரைக் கடத்தி, 5,000 ரிங்கிட் பணம் கேட்டு மிரட்டிய கும்பலை போலீசார் முறியடித்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை இரவு சுமார் 11.08 மணியளவில் பாதிக்கப்பட்டவரின் நண்பர் ஒருவரால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. தனது நண்பர் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாகவும், அவரை விடுவிக்க 5,000 ரிங்கிட் பணம் கேட்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
புகாரைப் பெற்ற உடனேயே களத்தில் இறங்கிய இஸ்கந்தர் புத்ரி மாவட்ட போலீசார், செவ்வாய்க்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் கெலாங் பாத்தாவில் வைத்து பாதிக்கப்பட்டவரைப் பத்திரமாக மீட்டனர்.
மீட்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, அதே நாள் அதிகாலை 1 மணியளவில் பெர்மாஸ் ஜெயா (Permas Jaya) பகுதியில் வைத்து 26 முதல் 32 வயதுடைய ஒரு உள்ளூர் ஆடவர் மற்றும் ஒரு பெண்ணைப் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரின் சிறுநீர் பரிசோதனையில் அவர்கள் ‘சாபு’ (Syabu) போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும், அவர்களிடம் ஏற்கனவே குற்றப் பின்னணி மற்றும் போதைப்பொருள் வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
இவர்களிடமிருந்து ஒரு கார், மூன்று கைபேசிகள், நகைகள் மற்றும் அதற்கான ரசீதுகள், ஒரு மடிக்கணினி (Laptop) மற்றும் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று, இஸ்கந்தர் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் எம். குமரேசன் கூறினார் .
இந்தச் செயலில் மொத்தம் மூன்று பேர் ஈடுபட்டிருந்தனர். இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தப்பியோடிய மற்றொரு உள்ளூர் ஆடவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர் என்று கூறிய அவர்,
கைதான இருவரும் ஜனவரி 25-ஆம் தேதி வரை 6 நாட்கள் தடுப்புக் காவலில் (Remand) வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
இச்சம்பவம் குறித்து தண்டனைச் சட்டத்தின் பிரிவு 363 (கடத்தல்) மற்றும் பிரிவு 384 (மிரட்டிப் பணம் பறித்தல்) ஆகியவற்றின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.




















