உரிமம் பெறுவது இனி சுலபம்! கோலாலம்பூர், புத்ராஜெயா, லாபுவானில் புதிய மாற்றம்: அமைச்சர் ஹேன்னா இயோ அறிவிப்பு!

கோலாலம்பூர்:

மலேசியாவின் கூட்டரசுப் பிரதேசங்களான கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் லாபுவான் ஆகிய பகுதிகளில் வர்த்தக உரிமங்கள் (Licensing) வழங்கும் முறையில் உள்ள சீர்தர இயக்கச் செயல்முறையை (SOP) எளிமைப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

மலேசியப் பிரதமர் அலுவலக (கூட்டரசுப் பிரதேசம்) அமைச்சர் ஹேன்னா இயோ, இன்று தனது முகநூல் பதிவின் மூலம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

கோலாலம்பூர் நகராண்மை கழகம் (DBKL), புத்ராஜெயா கார்ப்பரேஷன் (PPj) மற்றும் லாபுவான் கார்ப்பரேஷன் ஆகிய மூன்று அமைப்புகளிலும் உரிமம் வழங்கும் நடைமுறைகள் வரும் மாதங்களில் விரிவாக மறுஆய்வு செய்யப்படும் என்று அவர் கூறினார்.

உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் மற்றும் அன்றாட வர்த்தகப் பரிவர்த்தனைகள் அனைவரையும் எளிதில் சென்றடையும் வகையில் மாற்றியமைக்கப்படும் என்றும், தனியார் துறையினரின் கூடுதல் ஒத்துழைப்புடன், நிர்வகிப்பு முறைகளில் அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதே இந்த மாற்றத்தின் நோக்கம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

செழித்தோங்கும் வர்த்தகங்களும் ஒற்றுமையுடன் செயல்படும் சமூகங்களும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை என்று தான் உறுதியாக நம்புவதாக அமைச்சர் ஹேன்னா இயோ தெரிவித்தார். கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் வாகனங்கள் மற்றும் கடன் நிறுவனங்களுக்கான சங்கத்தின் (FMC) 58-ஆம் ஆண்டு விழாவையொட்டி ஆற்றிய உரையில், வர்த்தகச் சூழலை மேம்படுத்துவதில் இச்சங்கம் ஆற்றிவரும் பங்களிப்பைப் பாராட்டிய அவர், எதிர்காலத்தில் அவர்களுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here