பினாங்கு கடற்கரைகளை மீட்க 61 மில்லியன் ரிங்கிட் அதிரடித் திட்டம்: சுற்றுலாத்துறையைப் பாதுகாக்கப் புதிய வியூகம்!

கோலாலம்பூர்:

பினாங்கின் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களான பத்து ஃபெரிங்கி மற்றும் தஞ்சோங் பூங்கா கடற்கரைப் பகுதிகளில் நிலவும் தீவிர மண் அரிப்புப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க, 6 கோடியே 10 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான பிரம்மாண்டத் திட்டத்தை மாநில அரசு அறிவித்துள்ளது.

12-ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ், மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டம், பேவியூ ஹோட்டல் முதல் ஷாங்கிரி-லா வரையிலான கடற்கரைப் பரப்பையும், மெர்குரி ஹோட்டல் முதல் சீனர் நீச்சல் கழகம் வரையிலான பகுதிகளையும் உள்ளடக்கியது. இப்பகுதிகளில் நவீன அலைத்தடுப்புச் சுவர்கள் மற்றும் கடலோரப் பாதுகாப்பு கட்டமைப்புகளை உருவாக்கி, இயற்கைச் சீற்றங்களிலிருந்து கடற்கரையைப் பாதுகாப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் சுற்றுலாத்துறையை நிலைநிறுத்த இந்த நடவடிக்கை அவசியம் என்று மாநில உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து துறை செயற்குழு உறுப்பினர் ஜைரில் கீர் ஜோஹாரி தெரிவித்துள்ளார்.

நீர்ப்பாசன மற்றும் வடிகால் இலாகா (JPS) ஏற்கனவே இதற்கான நீரியல் ஆய்வுகளைப் பூர்த்தி செய்துள்ளது. தற்போது தற்காலிகத் தீர்வாக மணல் மூட்டைகளை அடுக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வரும் பிப்ரவரி இறுதிக்குள் இத்திட்டத்திற்கான நிபுணத்துவ ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு, நிரந்தரக் கட்டுமானப் பணிகள் துரிதப்படுத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலப் பார்வையில், 2027-ஆம் ஆண்டுக்குள் ‘ஒருங்கிணைந்த கடலோர மேலாண்மைத் திட்டத்தை’ (ISMP) மறுஆய்வு செய்து, எதிர்கால இயற்கை இடர்பாடுகளை முன்கூட்டியே கண்டறியவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தொலைநோக்குத் திட்டத்தின் மூலம் கடற்கரை அரிப்பு தடுக்கப்படுவது மட்டுமின்றி, இயற்கை எழில் கொஞ்சும் பினாங்கின் கடற்கரைகள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்காகப் பாதுகாக்கப்படும். இதன் மூலம் வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்படுவதோடு, பினாங்கு மாநிலம் தனது சர்வதேச சுற்றுலா அடையாளத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here