IJN கண்காணிப்பில் துன் மகாதீர்: காபி அருந்த பொதுவெளிக்கு வந்த 100 வயதான முன்னாள் பிரதமர்

கோலாலம்பூர்:

வலது இடுப்பு எலும்பு முறிவினால் பாதிக்கப்பட்டு தேசிய இருதய சிகிச்சைக்கழகத்தில் (IJN) சிகிச்சை பெற்று வரும் 100 வயது மூத்த அரசியல் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது, இன்று பிற்பகல் ‘பெவிலியன் டாமான்சாரா ஹைட்ஸ்’ (Pavilion Damansara Heights) வணிக வளாகத்தில் உள்ள ஓர் உணவகத்திற்கு வருகை தந்தார்.

கடந்த ஜனவரி 6-ஆம் தேதி தனது இல்லத்தில் தவறி விழுந்த பிறகு, 22 நாட்கள் கழித்து துன் மகாதீர் பொதுவெளியில் தோன்றுவது இதுவே முதல் முறையாகும்.

சுமார் 40 நிமிடங்கள் அந்த உணவகத்தில் செலவிட்ட மகாதீர், ஒரு கிளாஸ் ‘ஐஸ் சாக்லேட்’ (Iced Chocolate) பானத்தை அருந்தி மகிழ்ந்தார்.

இந்தச் சிறிய வெளிப்பயணத்தின் போது அவரது மனைவி துன் டாக்டர் சித்தி ஹஸ்மா முகமது அலி, ஐஜேஎன் தலைமை நிர்வாக அதிகாரி பேராசிரியர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமது எசானி மற்றும் மருத்துவக் குழுவினர் உடனிருந்தனர்.

வயது முதிர்வு மற்றும் எலும்பு முறிவு காரணமாக அவர் சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார்.

துன் மகாதீரின் உதவியாளர் சுஃபி யுசோஃப் இது குறித்துக் கூறுகையில், “அவர் இன்னும் மருத்துவமனையிலிருந்து அதிகாரப்பூர்வமாக விடுவிக்கப்படவில்லை. பிசியோதெரபி சிகிச்சையின் ஒரு பகுதியாகவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் இந்தச் சிறிய பயணம் மேற்கொள்ளப்பட்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு அவர் மீண்டும் ஐஜேஎன் மருத்துவமனைக்கே அழைத்துச் செல்லப்பட்டார்,” என்று தெரிவித்தார்.

100 வயதைக் கடந்த நிலையிலும், அறுவை சிகிச்சை இன்றி பிசியோதெரபி (Physiotherapy) மூலம் அவர் குணமடைந்து வருவது அவரது உடல் உறுதியைக் காட்டுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் சில வாரங்களுக்கு அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here