கோலாலம்பூர்:
காஜாங்கில் உள்ள தஹ்ஃபிஸ் பள்ளி ஒன்றில் மாணவர் ஒருவர் சக மாணவர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து காஜாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக, காஜாங் மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி நஸ்ரோன் அப்துல் யூசுப் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 18-ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில், பள்ளியில் தங்கியிருந்த அந்த மாணவரை சக மாணவர்கள் மூவர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவரின் இரு கைகளிலும் பலத்த காயங்களும், வீக்கமும் ஏற்பட்டுள்ளன.
இது குறித்து கடந்த திங்கட்கிழமை காலை 11.28 மணிக்கு அதிகாரப்பூர்வமாகப் புகார் பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்த இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக உறுதிப்படுத்தினார்.
இச்சம்பவம் குற்றவியல் சட்டப்பிரிவு 323-இன் கீழ் (தன்னிச்சையாகக் காயம் விளைவித்தல்) விசாரிக்கப்படுகிறது.
இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிகளுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை அல்லது 2,000 ரிங்கிட் அபராதம், அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இச்சம்பவம் குறித்த கூடுதல் தகவல்கள் அல்லது பின்னணி தெரிந்த பொதுமக்கள், புலனாய்வு அதிகாரி சார்ஜன் முகவட் ஹனிஃபாவை 019-735 6544 எனும் எண்ணில் தொடர்பு கொண்டு உதவலாம் எனத் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.




















