( ரெ.மாலினி)
மலாக்கா:
மலாக்கா பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அட்லி சஹாரி, ஜசெக வின் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில அரசுக்கு ஆதரவை மீட்டுக் கொண்ருந்தாலும், தற்போதைக்கு முதலமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் ரவூஃ யூசோவின் தலைமையைத் தொடர்ந்து ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.
புக்கிட் கட்டில் சட்டமன்ற உறுப்பினருமான அவர், மாநில அரசில் பக்கத்தான் நிலைப்பாடு குறித்த இறுதி முடிவு நாளை நடைபெறவுள்ள மாநில பி ல்எச் கூட்டத்தில் எடுக்கப்படும் என்றார்.
“தற்போது மாநிலத்திற்கு ஒரே முதலமைச்சர்தான் உள்ளார். அரசியல் நியமனங்கள் தொடர்பான முடிவுகள் நாளைய கூட்டத்தில் விவாதிக்கப்படும். எனக்கு மாநில அரசில் எந்தப் பதவியும் இல்லை. ஆனால், பதவி வகிப்பவர்களின் நிலை குறித்தும் ஆலோசித்து, மக்களுக்கான சேவையில் பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்முறையை ஒழுங்குபடுத்துவோம்,” என்று கூறினார்.
ஜசெகவின் நடவடிக்கையை தாம் ஆதரிக்கிறாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அட்லி, பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனியாக முடிவு எடுக்கும் உரிமை இருப்பதாகவும், ஆனால் கூட்டணியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு ஒருமித்த முடிவின் அடிப்படையில்தான் அறிவிக்கப்படும் என்றும் விளக்கினார்.
மேலும், மாநில அரசியலமைப்பு (திருத்தம்) மசோதாவுக்கு பி எச் எதிர்ப்பு தெரிவித்த விவகாரத்தில் கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு இல்லை என்றும் தெரிவித்தார்.
துணைப் பாதுகாப்பு அமைச்சருமான அட்லி, நாளைய பிச் கூட்டத்தில் அனைத்து பி எச் சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டணிக் கட்சிகள் மற்றும் ஜசெக மலாக்காவின் முடிவை ஒத்திவைக்குமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விடுத்துள்ள வேண்டுகோளும் பரிசீலிக்கப்படும் என்றார்.
சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் இருக்கைகள் மாற்றப்பட்ட விவகாரம் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும், அது செய்யப்படாமல் இருந்திருக்க வேண்டும் என்றும் அவர் விமர்சித்தார்.
நேற்று ஜசெக மலாக்கா தலைவர் கூ போய் தியோங், மாநில அரசியலமைப்பு (திருத்தம்) 2026 மசோதாவின் கீழ் நியமன சட்டமன்ற உறுப்பினர்பதவி அறிமுகப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநில அரசுக்கு பக்காத்தான் ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, ஜசெகாவின் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும் அமனா கட்சியின் ஒருவரும் மாநில அரசில் வகித்த எக்ஸ்கோ, துணை எக்ஸ்கோ, துணை சபாநாயகர் உள்ளிட்ட அனைத்து அரசியல் பதவிகளிலிருந்தும் விலகினர்.
இருப்பினும், இன்று நடைபெற்ற மலாக்கா மாநில சட்டப்பேரவை கூட்டத்தில் அட்லி சஹரி எதிர்க்கட்சி வரிசையில் அமராமல், அரசு தரப்பின் இருக்கையிலேயே அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.



















