கோலாலம்பூர்:
சுங்கை கபால் (Sungai Kapal) மற்றும் தாமான் பாயு டாமாய் பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணிகளில் 50 சதவீத முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஜோகூர் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
மொத்தம் 99.55 ஹெக்டேர் நிலப்பரப்பில் தீ பரவியுள்ளது. இதில் சுமார் 49.8 ஹெக்டேர் (கிட்டத்தட்ட பாதி) பரப்பளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அணைக்கப்பட்டுள்ளது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் இதுவரை உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.
வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாகத் தீ வேகமாகப் பரவியதுடன், அருகிலுள்ள தாமான் பாயு டாமாய் குடியிருப்புப் பகுதிகளில் அடர்ந்த புகைமூட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தீ எரியும் இடத்திற்கு அருகே போதிய நீர் ஆதாரங்கள் இல்லாதது பெரும் சவாலாக உள்ளது. மேலும் : தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்குப் பாதைகள் மிகக் கடினமாக உள்ளன. இருப்பினும் தீ பரவும் வேகம் மற்றும் நிலப்பரப்பை ஆய்வு செய்ய சிறப்பு ‘ட்ரோன்’ (Drone Unit) குழு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தீ மேலும் பரவாமல் தடுக்க பெங்கெராங் நகராட்சி மன்றத்திடம் (MPP) இருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட எக்ஸ்கவேட்டர் (Excavator) இயந்திரம் மூலம் ‘தீ தடுப்பு வேலிகள்’ (Fire breaks) உருவாக்கப்படுகின்றன. இந்தப் பணியில் 26 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு உதவியாகப் போலீசார், குடிமைத் தற்காப்புப் படை (APM) மற்றும் பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் கைகோர்த்துள்ளனர்.
முழுமையாகத் தீ அணைக்கப்படும் வரை போராட்டங்கள் தொடரும் என்று ஜோகூர் தீயணைப்புத் துறை துணை இயக்குனர் முகமட் அல் முஸ்தகிம் தெரிவித்துள்ளார்.
இப்பகுதியில் நிலவும் புகைமூட்டம் காரணமாகச் சுவாசப் பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்க்கப் பொதுமக்கள் முகக்கவசம் (Mask) அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
























